செவ்வாய், 21 மார்ச், 2023

பட்ஜெட்டில் பலா - கறிவேப்பிலை- முருங்கை: அறிவிப்புகள்!

 மின்னம்பலம் -Kavi  :  பலா, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“அதன்படி, ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2500 எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் அரியலூர், திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
பலா தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி, புதிய ரகங்கள், உயர் மகசூல் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்படும்.


வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
கறிவேப்பிலை
கோவை கறிவேப்பிலைக்கு ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்து அதிக அளவில் அங்கக இடுப்பொருட்களை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகளில் 1500 எக்டர் பரப்பில் கறிவேப்பிலை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
வரும் ஆண்டில் 100 எக்டரில் செங்காம்பு  ரக கறிவேப்பிலை பயிரிட தரமான நடவுச் செடிகள், நுண்ணீர் பாசன அமைப்புகள் வழங்கப்படும்.

கறிவேப்பிலை தூள், பேஸ்ட் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் வரும் ஆண்டு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

முருங்கை
முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம் அறிவித்தது. முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் மதுரையில் செயல்பட்டு வருகிறது.

வரும் ஆண்டு 1,000 எக்டர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்தலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

முருங்கையில் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் வகையில் சாகுபடி முறைகள் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி நெறிமுறைகள் குறித்த பயிற்சிகள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் ஒருங்கிணைந்து விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும். இதற்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக