திங்கள், 27 மார்ச், 2023

விசாரணை கைதிகளின் பற்களை கல்லால் உடைத்து ..அந்தரங்க உறுப்பை நசுக்கும் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர் சிங்.. கதறும் இளைஞர்கள்!

கல்லைக் கொண்டு பல்லை உடைத்த ஐபிஎஸ்
அந்தரங்க உறுப்பை நசுக்கி

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களை விசாரிக்கும் போது பற்களை பிடுங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களிடம் அத்துமீறுவதாக ஏ.எஸ்.பி பல்பீர் சிங் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியும், அந்தரங்க உறுப்பை நசுக்கியும் கொடுமைப்படுத்துவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பல்வீர் சிங். 2020 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர் சிங் அம்பாசமுத்திரத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவர் அங்கு பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்லைக் கொண்டு பல்லை உடைத்த ஐபிஎஸ்
ஒரு தகராறில் ஈடுபட்ட வழக்கில், செல்லப்பா, மாரியப்பன் உள்ளிட்ட சில இளைஞர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு செல்லப்பா உள்ளிட்டவர்களை 2 காவலர்கள் கையைப் பிடித்துக்கொள்ள, ஏ.எஸ்.பி பல்வீர் சிங் ஜல்லிக்கற்களைக் கொண்டு பல்லைத் தட்டித் தட்டி உடைத்ததாகவும், ரத்தம் சொட்டச் சொட்ட வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாக செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார். 8 பேரின் பற்களை உடைத்து கடுமையாக தாக்கியதாகவும் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அந்தரங்க உறுப்பை நசுக்கி
மேலும், செல்லப்பாவின் சகோதரரான புதிதாக திருமணமான மாரியப்பன் என்பவரின் அந்தரங்க உறுப்பில் இடது கையால் கடுமையாகப் பிடித்து நசுக்கியதோடு, ஷூ காலை வைத்து நெஞ்சில் ஏறி மிதித்து, கொடுமை செய்ததில், அவர் தற்போது எழக்கூட முடியாமல் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செல்லப்பா வேதனையோடு தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் அடித்ததாக கோர்ட்டில் சொல்லக்கூடாது, பைக்கில் இருந்து விழுந்துவிட்டோம், மரத்தில் இருந்து விழுந்துவிட்டோம் எனச் சொல்ல வேண்டும் என மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

குறடு மூலம்
இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபர் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். இந்த இளைஞரை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அவரது பற்களை குறடு மூலம் பிடுங்கி எடுத்துள்ளார். பின்னர் கூழாங்கற்களை வாயில் போட்டு மெல்லச் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடவடிக்கை வேண்டும்
இதுகுறித்து நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் கூறுகையில், "அம்பாசமுத்திரம் பகுதியில் சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களது பற்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி உள்ளார். ஏஎஸ்பி இடுக்கியை பயன்படுத்தி பற்களை பிடுங்கி வருவது பலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கூட மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அவர் மீது மனித உரிமை கமிஷனிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். அவர் மீது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

About 10 youths in Ambasamudram police division claimed ASP Balveer Singh IPS removed their teeth with cutting plier & crushed testicles.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக