வியாழன், 9 மார்ச், 2023

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு

 BBC News தமிழ்  : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்த நிலையில், அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். இரண்டாவது முறையாக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சபாநாயகருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியுள்ள கடிதத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் குறிப்பிட்டிருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்த அதிகாரபூர்வ தகவலை ஆளுநர் அலுவலகமோ அரசோ வெளியிடவில்லை. அரசு வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள ஆளுநரின் கடிதம் தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளது. அதன் விவரம்:

"மாநில அரசுக்கு அதிகாரமில்லை"
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

"ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம் கவலை அளிக்கும் அதே வேளையில், ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குமுறைப்படுத்தாத காரணத்தால்தான் பலரும் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது."
"கட்டுப்பாடற்ற ஆன்லைன் விளையாட்டின் காரணமாகவே சில நேரங்களில் மரணங்கள் நிகழ்கின்றன."
"ஆன்லைன் சைபர் என்பது மத்திய அரசின் வரம்புக்குள் வரும் விஷயம். எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்குமுறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. அது நிச்சயமற்றதாகவும் இருக்கும்."

ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (g) பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசாங்கமும் சட்டம் இயற்ற முடியாது.

ஒரு மாநில அரசாங்கத்தால் திறமையான விளையாட்டை ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும் மற்றும் முற்றிலும் தடை செய்ய முடியாது.

"இந்த விஷயங்களை ஏற்கெனவே தெளிவுபடுத்தி அறிவுறுத்திய பிறகும் மாநில அரசு முன்பு அவசர சட்டத்தில் நிறைவேற்றிய அதே அம்சங்களையே ஆளுநருக்கு அனுப்பியுள்ளது," என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

3 காரணங்கள்

ஆளுநர் மசோதா

மசோதாவை திருப்பி அனுப்ப மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தியுள்ளார் ஆளுநர். அது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியது:

முதலாவதாக இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது.

இரண்டாவதாக, இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாகவும் அமையும்.

மூன்றாவதாக இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று ஆளுநர் கடிதத்தில் கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இனி என்ன நடக்கும்?

பண மசோதா நீங்கலாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதாவை மாநில ஆளுநர் தமது பரிசீலனை அல்லது ஆய்வுக்கு உட்படுத்தி ஒப்புதல் வழங்கலாம்.

ஒருவேளை அந்த மசோதாவில் விளக்கங்கள் தேவைப்பட்டால் அதை அவர் அரசிடம் கேட்டுப் பெறலாம். அந்த மசோதா திருப்தி அளிக்கவில்லை என்றால் அதை அவர் அரசுக்கே திருப்பி அனுப்பலாம்.

ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் மசோதா, ஆளுநரின் யோசனைகளுடன் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அதற்கு அவர் ஒப்புகை வழங்குவது கட்டாயமாகும்.

அதுவே மாநில அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட அவசர சட்டமாக இருந்தால் அதை தாமதிக்காமல் ஒரு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அது அரசிதழில் வெளியிடப்பட்டு அரசாணையாக வெளியிடப்பட்டால் அந்த சட்டத்தை சட்ட அமலாக்க அமைப்புகள் அமல்படுத்த அதிகாரம் கிடைக்கும்.

அதே சமயம், அந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளில் இருந்து ஆறு வாரங்களில் அந்த அவசர சட்டம் காலாவதியாகி விடும். எனவே அதற்குள்ளாக முறையான மசோதாவாக பேரவையில் தாக்கலாகி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அப்போதுதான் மசோதா அது சட்ட வடிவத்தைப் பெறும்.

மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை : தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத்தை பந்தயம் என வரையறுக்கிறது. மேலும், பணம் அல்லது பிற வகை கட்டண முறை மூலம் ஆடப்படும் ஆன்லைன் கேம்களை விளையாடுவதை அது உள்ளடக்கியுள்ளது. இந்த கட்டண முறையில் மெய்நிகர் கிரெடிட்கள், டோக்கன்கள், பொருள்கள் அல்லது கேமில் வாங்கிய கட்டண மதிப்பு என அனைத்தும் உள்ளடக்கியிருக்கலாம். .

சில ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தடை செய்தல்: பணம் அல்லது பிற முதலீட்டை வைத்து விளையாடப்படும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் கேம்களை புதிய மசோதா தடை செய்கிறது.

போக்கர், ரம்மி ஆகியவை இதில் அடங்கும். பின்வரும் நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைச் சந்திக்கும் வாய்ப்புக்கான ஆன்லைன் கேம்களை இது வரையறுக்கிறது:

(i) திறனை விட வாய்ப்பு ஆதிக்கம் செலுத்துவது

(ii) கேம்கள் வாய்ப்பின் விளையாட்டுகளாக வழங்கப்படுவது

(iii) வாய்ப்பின் தன்மையை மிகையான திறமையால் மட்டுமே முறியடிக்க முடிவது

(iv) கேம்களில் சீட்டுகள், பகடை அல்லது ரேண்டம் நிகழ்வு ஜெனரேட்டர்களில் இயங்கும் அதிர்ஷ்ட சக்கரம் மூலம் ஆடுவது ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு கேமிங் ஆணையத்தை நிறுவுதல்: வாய்ப்புள்ள ஆன்லைன் கேம்களைக் கண்டறிந்து, தடைசெய்யப்பட்ட கேம்களின் அட்டவணையில் அவற்றைச் சேர்க்க மாநில அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு இந்த ஆணையத்தின் பொறுப்பாகும். இந்த ஆணையம் கீழ்கண்ட அதிகாரத்தைப் பெற்றிருக்கும்.

(i) மாநிலத்தில் செயல்பட உள்ளூர் ஆன்லைன் கேம் வழங்குநர்களுக்கு சான்றிதழ்களை வழங்குதல்
(ii) ஆன்லைன் கேம்களுக்கான நேர வரம்பு, பண வரம்பு மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்குதல்
(iii) தகவல்களைச் சேகரித்து பராமரித்தல் மற்றும் ஆன்லைன் கேம் வழங்குநர்களின் செயல்பாடுகள் தொடர்பான தரவை வைத்திருத்தல்

உள்ளூர் அல்லாத கேம் சேவை வழங்குநர்களின் கட்டுப்பாடு: தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள கேம் வழங்குநர்கள், மாநிலத்தில் உள்ள பயனர்களுக்கு தடை செய்யப்பட்ட கேம்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும்.

(i) ஆன்லைன் விளையாட்டில் பங்குபெறும் நபரின் இருப்பை உடல் ரீதியாக அவர் அங்குதான் இருக்கிறாரா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு விளையாட ஒப்பந்தம் செய்தல்
(ii) மாநிலத்தில் தங்கள் உடல் இருப்பை நிலைநாட்ட வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்தல்
(iii ) ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சில ஆன்லைன் கேம்களை அரசு தடைசெய்கிறது என்று வருங்கால வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தல்
(iv) மாநிலத்தில் உடல் ரீதியாக விளையாட்டில் பங்கெடுக்கும் நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட கேம்களுக்கான அணுகல் இல்லை என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அபராதம்: தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

குற்றங்கள் கூட்டும். உள்ளூர் அல்லாத கேம் வழங்குநரால் மீறப்பட்டால், தமிழ்நாடு கேமிங் ஆணையம், மாநிலத்தில் உள்ள நபர்கள், அத்தகைய கேம்களை அணுகுவதைத் தடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்ளும்.

மிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
இதன்பின் தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜூன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப்டம்பர் 26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அக்டோபர் 1ஆம் தேதி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேறியது. பிறகு ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் கொடுத்த அவசர சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பரிசீலனையில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் தற்போது அதை அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக