புதன், 1 மார்ச், 2023

மோடியின் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின்..அமித்ஷா உடனும் சந்திப்பு டெல்லியில் பரபரக்கும் அரசியல் களம்

 tamil.oneindia.com  -  Noorul Ahamed Jahaber Ali  :   டெல்லி: தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசி தனது துறை சார்ந்த முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமைச்சராக பதவியேற்றார்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை இலாக்கா அவருக்கு ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார்.


இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்று முதல்முறையாக நேற்று அவர் டெல்லிக்கு பயணம் சென்று இருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித்தின் பேத்தியின் திருமண விழா நேற்று இரவு 7 மணியளவில் டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
திருமண விழாவுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலினை பன்வாரிலால் புரோகித் வரவேற்று மகிழ்ந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உதயநிதிக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி இருந்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டுள்ளது.

கோரிக்கை வைத்த உதயநிதி
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய விளையாட்டுத் துறை சார்ந்த திட்டங்கள், நீட் விலக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுராக் தாக்கூருடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பை தொடர்ந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து பேச உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அப்போது விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை அவர் முன் வைப்பார் என்று கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது உள்ளிட்டவை பற்றியும் உதயநிதி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய அமைச்சர்
அனுராக் தாக்கூர் உடனான சந்திப்பை தொடர்ந்து மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதிலும் தமிழ்நாட்டுக்கு என அவரவர் துறை சார்ந்த முக்கிய கோரிக்கைகளை உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவுடன் சந்திப்பு
இறுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்த பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நேற்று 2 நாள் பயணமாக டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி, ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர்.

2 நாள் பயணம்
அதன் தொடர்ச்சியாக மாலை டெல்லி முத்தமிழ் போரவை நிர்வாகிகள், டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி தமிழ் கல்விக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரை உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து டெல்லியில் பணியாற்றும் தமிழ் பிரிவு அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

Tamil Nadu Sports Minister Udhayanidhi Stalin, who is on a 2-day visit to Delhi, will meet Prime Minister Narendra Modi this evening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக