செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

அண்ணாமலை ரூ.100 கோடி ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் கையூட்டு

 நக்கீறன் : நிதி நிறுவன குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிக்கு பாஜகவில் பொறுப்பு கொடுத்ததுடன் டெல்லியில் தங்க வைத்து பாதுகாப்பு கொடுக்க நூறு கோடி ரூபாய் வரை, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அன்பளிப்பு வாங்கியுள்ளதாக வெளியான தகவல்தான் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இது கவர்ச்சிகரமான பல விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.


ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 சதவீதம் வரை வட்டியாக தருகிறோம் எனக் கூறியுள்ளனர். மேலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங், பிட்காயின் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது லாபகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி பொதுமக்களை கவர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை நம்பி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் இந்த நிறுவனத்தின் கிளைகளில் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால் சதுரங்க வேட்டை பாணியில் கல்தா கொடுக்க முடிவு செய்த நிர்வாகிகள், மக்களுக்கு உரிய வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரபீக், பாஸ்கர், மோகன்பாபு, ஐயப்பன் உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவர்களின் வங்கிக் கணக்கை ஃப்ரீஸ் செய்தனர்.

மீதமுள்ள குற்றவாளிகளான சென்னை நாராயணி, விருதுநகர் முத்துராமலிங்கம், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதில் ஹரிஷ் என்பவரிடம் எந்த வருமானமும் இல்லாமல் ரூ.150 கோடி வரை சொத்து உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு போட்டது. இதனால் கடந்த மே 24 ஆம் தேதி முதல் ஹரிஷ் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசார் ஒருபுறம் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஜூன் 2 ஆம் தேதி பாஜக விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் எஸ். அமர் பிரசாத் ரெட்டி பத்து பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கியிருந்தார். அதில் 8 ஆவது இடத்தில் ஹரிஷ் இடம்பெற்றிருந்தார். அவருக்கு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டு எதிர்க்கட்சிகள் கொதித்து எழுந்தன. மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபருக்கு கட்சி பொறுப்பா... இதனால்தான் பாஜக மோசடிப் பேர்வழிகளின் கட்சி என விமர்சிப்பதாக எதிர்க்கட்சிகள் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தன. இதுகுறித்து, விளக்கமளித்த அமர்பிரசாத் ரெட்டி, “இந்த சம்பவம் அரசியல் பழிவாங்கல்” எனத் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் “ஹரீஷை தொடர்புகொள்ள முடியவில்லையென்றும் அவர் இதுவரை கட்சி பதவியை ஏற்கவில்லையெனவும்” தெரிவித்தார். ஆனால், ஹரிஷ் அண்ணாமலையுடன் மாஸ்க் அணிந்தபடி நிற்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பின்னர் இந்த விஷயம் ஆறிப்போன நிலையில், இப்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அண்ணாமலை மீது ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவினரும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அண்ணாமலையை பாஜகவும் கிரிமினல்களின் ஃபாதர் என்றும் பக்கா ஃபோர் ட்வென்ட்டி என்றும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். ஹரிஷ் என்பவருக்கு பாஜகவில் பொறுப்பு கொடுத்ததுடன் அவரை டெல்லியில் தன் பாதுகாப்பில் தங்கவும் வைத்துள்ளார் என்பதுதானாம்.  இதற்கு அண்ணாமலை 100 கோடி ரூபாய் வரை அன்பளிப்பு பெற்றுள்ளதுதான் பாஜகவினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அந்த ஹரீஷ் வாயைத் திறந்தால் நமது கட்சிக்கே ஆபத்து எனவும் சொல்லி அண்ணாமலை சமாளிக்க முயல்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக