ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

பிகார் மாநாட்டில் லாலு பிரசாத் சூழுரை .. பாஜகவை நூறு சீட்டுக்களுக்குள் முடக்குவோம்

 minnambalam.com - Kavi : 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தொடர்ந்து பேசி வரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், “பாஜகவை 100 சீட்டுக்குள் முடங்கச் செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக்கொண்டார். இந்த கூட்டணி முறிவைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமித் ஷா இன்று பீகார் சென்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இன்று(பிப்ரவரி 25) பீகாருக்கு சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.



23 நிமிடம் பேசிய அவர் அதில் 10 முறை நிதிஷ் குமார் ஆட்சியை காட்டு ராஜ்ஜியம் என்று குறிப்பிட்ட அமித் ஷா, “பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமர் நாற்காலி கனவு வந்துவிடும். பாஜகவில் நிதிஷ் குமாருக்கான கனவு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.

ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி பாதகமான கூட்டணி. எண்ணெய்யும் தண்ணீரும் போன்று இந்த இரு கட்சியும் ஒன்று சேராது. 2024லிலும் பிரதமர் பதவி காலியாகாது. அப்போதும் மோடி மீண்டும் பிரதமராவார்.

பீகாரில் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இருப்பதால் மாநிலத்தில் பாதி காட்டு ராஜ்ஜியம் வந்துவிட்டது. முதல்வராக வந்துவிட்டால் முழு காட்டு ராஜ்ஜியம் வந்துவிடும்” என கடுமையாக விமர்சித்தார்.

மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் அமித் ஷா பேசிய இரண்டு மணி நேரத்தில் புர்னியா மாவட்டத்தில் 7 கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய ஒற்றுமை பேரணியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நிதிஷ் குமார் அமித் ஷாவை கடுமையாக தாக்கி பேசினார்.

அப்போது அவர், “பாஜகவில் இரண்டு தலைவர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் மோடி, மற்றொருவர் அமித் ஷா. இவர்கள் இருவரும் பேசுவார்களே தவிர எதுவும் செய்யமாட்டார்கள். இன்று ஊடகங்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை அனைத்தும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைத் தவிர வேறு எதிலும் தனிப்பட்ட விருப்பம் இல்லை என்று கூறிய நிதிஷ் குமார், “2024 மக்களவைத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவுக்கு எதுவும் கிடைக்காது. நாட்டைவிட்டு விரட்டப்படுவார்கள்.
பாஜகவுக்கு 100 இடங்கள் கூட கிடைக்காது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் விரைந்து முடிவெடுக்க வேண்டும். விரைவில் காங்கிரஸ் முன்முயற்சி எடுக்கும் என்று காத்திருக்கிறோம்.
ஒருமுறை பாஜக தோற்கடிக்கப்பட்டால். அவர்கள் என்ன செய்தார்கள் என அனைத்தும் அம்பலமாகும். என்ன நடக்கிறது என ஊடகங்களும் சொல்லும். எனவே கூடிய விரைவில் நாம் ஒன்றுபட வேண்டும். இல்லை என்றால் யாருக்கு பலன் கிடைக்கும் என நினைத்து பாருங்கள்” என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் இந்த பேரணியில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக