ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

பாம்பன் ரயில் பாலம் சேவை நிறுத்தம்.. 109 வயது ஆன நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக..

  BBC News தமிழ் -  பிரபுராவ் ஆனந்தன் : ராமேஸ்வரம் அருகே கடலின் குறுக்கே அமைந்துள்ள 109 வயதான பாம்பன் பழைய தூக்கு பாலத்தில் ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மீனவ மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உடனடியாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இந்த ரயில் பாலம் தமிழ்நாட்டின் பெருநிலப் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை கொண்டது.



பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் கத்திரி வடிவ தூக்கு பாலம் வடிவமைக்க பட்டு செயல்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறே கட்டப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பாம்பன் ரயில் பாலத்தை புதுப்பித்து அகல ரயில் பாதையாக மாற்றி தற்போது 110வது ஆண்டில் பாம்பன் பாலம் அடியெடுத்து வைத்துள்ளது.

பாம்பன் பாலம் கட்டப்பட்ட வரலாறு
ஆங்கிலேயர்களால் 1854ல் 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்கள் சென்று வந்தன.

கடந்த 1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். பாம்பன் கடல், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்து ஏற்படுத்த திட்டமிட்டனர்.

இதற்காக ஜெனரல் மன்றோ என்பவரால் ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் ஆய்வு நிலையில் கைவிடப்பட்டது. சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் 'டுவின்ஸ் ரயில் பெர்க்கி சர்வீஸ்' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.

அப்போது 229 லட்சம் செலவில் திட்டத்தை செயல்படுத்த பிரிட்டீஷ் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது அதிக தொகை என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இறுதியாக கீழே கப்பல், மேலே ரயில் செல்லும் வகையில் 1899 ல் 'டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்' பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கைவிடப்பட்ட திட்டம் மீண்டும் தொடக்கம்
வர்த்தக போக்குவரத்திற்காக பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்கு பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதற்காக 70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்கியது.

கடந்த 1902 முதல் பாலம் கட்டுவதற்கு அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. குஜராத்தை சேர்ந்த கட்ஜ்கரோலி குடும்பத்தார் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இவர்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளை கடந்து கடலுக்குள் 144 தூண்களுடன் பாம்பன் பாலம் 1913ல் கட்டி முடிக்கப்பட்டது.

1914 பிப்ரவரி 24ல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடி தலைமன்னார் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்சாரில் தொழில் நுட்ப கோளாறு
பாம்பன் ரயில் பாலம் கட்டி நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனால் தென்னக ரயில்வே சார்பில் சென்னையில் உள்ள ஐஐடி குழுவினர் உதவியுடன் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் வகையில், ரயில்கள் தூக்கு பாலம் வழியாக கடந்து செல்லும் போது அதிர்வுகளை கண்காணிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சென்சார்கள் பொருத்தபட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ந்தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் பாம்பன் பாலத்தை கடந்து சென்றபோது அதிர்வுகள் அதிகம் இருந்ததாக அபாய ஒலி எழுந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு உத்தரவு வரும் வரை பாம்பன் தூக்கு பாலம் வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

பாம்பன் தூக்குப் பாலத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்து தொழில் நுட்ப கோளாறு சீர் செய்தனர்.
இருப்பினும் 109 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்கினால் விபத்துகள் ஏற்படலாம் என முன்னெச்சரிக்கையாக, பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேதி குறிப்பிடாமல் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை நிறுத்தியுள்ளது தென்னக ரயில்வே.

நூற்றாண்டு காலமாக பலரை சுமந்து ரயில் சேவையாற்றி வந்த பாம்பன் பாலத்தில் திடீரென ரயில்வே துறை ரயில் சேவையை நிறுத்தியது உள்ளூர் பொது மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இதுகுறித்து கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணி மனு பிபிசி தமிழிடம் பேசுகையில், குடும்பத்துடன் ரயிலில் பாம்பன் பாலத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக 4 மாதங்களுக்கு முன் ரயிலில் முன் பதிவு செய்திருந்தேன். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பாம்பன் பாலம் வழியாக ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக தற்போது தான் எனக்கு தெரியவந்தது.

பாம்பன் ரயில் பாலம் வழியாக பயணிப்பதற்காக குடும்பத்துடன் ஆவலுடன் வந்திருந்த நிலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது தெரிந்ததும் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம்.

இது என்னைப் போன்று ராமேஸ்வரம் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பலருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே உடனடியாக புதிய பாலப் பணிகள் முடிவுற்று கடலின் அழகை ரசிப்பதற்கு ரயில் சேவையை ரயில்வே துறை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
இது குறித்து மீனவ பெண் மேரி பிபிசி தமிழிடம் பேசுகையில் பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது எங்களுடைய கருவாடு மற்றும் மீனை வெளி மாவட்டத்திற்கு குறைந்த விலையில் அனுப்ப மிகவும் வசதியாக இருந்தது .

மீன் மற்றும் கருவாடு வாசனை அதிகமாக இருப்பதால் பேருந்துகளில் அவற்றை ஏற்றுவதற்கு அனுமதிப்பதில்லை. எனவே எங்களுக்கு ரயிலில் அனுப்புவது மிகவும் எளிதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் எங்களுடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய பால கட்டுமான பணி முடிந்து அதில் ரயில் சேவை துவங்குவதற்கு முன் பழைய பாலம் வழியாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கப்பட்டால் மட்டுமே தீவு மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

"நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்"
பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக் பிபிசி தமிழிடம் பேசுகையில் நூற்றாண்டு பழமையான பாம்பன் ரயில் பாலத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாலத்தில் தொடர்ச்சியாக ரயில்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருகிறோம்.

புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் பழைய ரயில் பாலத்தில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் கட்டும் வரை பழைய ரயில் பாலத்தில் விரைவு ரயில்களை இயக்காமல் பயணிகள் ரயில்களை மட்டுமாவது இயக்கி ராமேஸ்வரம் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர் மீனவர்களுக்கு உதவி செய்ய ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

மேலும் பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே உள்ள தூக்கு பாலத்தை உடைத்து அகற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக செய்திகள் வாயிலாக அறிகிறோம். எங்களுக்கு இது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் இந்த பாம்பன் தூக்குப்பாலத்தை அப்புறப்படுத்தாமல் நூற்றாண்டு நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை உள்ளது என்றார் பேட்ரிக்

விரைவில் ரயில் சேவை
பாம்பன் பழைய பாலத்தில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தென்னக ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் குகனேசனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். அவர் இது குறித்துப் பேசுகையில், பாம்பன் பாலத்தில் கடல் அரிப்பின் காரணமாக பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பாம்பன் பழைய ரயில் பாலம் சுமார் நூற்றாண்டைக் கடந்து உள்ளதால் அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. எனவே பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜூன் மாதத்தில் புதிய ரயில் பால பணி நிறைவடைந்து அதில் விரைவில் ரயில் சேவை தொடங்கப்பட்டு மீண்டும் மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் அகற்றப்படுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக