hindutamil.in : திருப்பூரின் நிலைமை மோசமாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது - சமூக வலைதளங்களில் வைரலாகும் மளிகைக் கடை பதாகை
திருப்பூர்: நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது என்று திருப்பூரில் மளிகைக் கடை முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலாளர் நகரமான திருப்பூரில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாகத் தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, தொழில்துறையினர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல நிறுவனங்கள் போதிய ஆர்டர்கள் இல்லாமல் தவித்து வருகின்றன.
நூல் விலை உயர்வு, கடன் வட்டி விகித உயர்வு காரணமாக தொழில் துறை படுமோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. திருப்பூரில் செயல்பட்டு வந்த பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்திக் குறைப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. வேலை இழப்பால் தொழிலாளர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துவிட்டது. இது தேநீர் கடை முதல் மளிகைக் கடை வரை வணிகத்தைப் பாதித்துள்ளது.
இந்நிலையில், திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை, கடந்த 3 நாட்களாக முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அதில், "திருப்பூரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் எனக்கு கடன் கொடுக்கும் ஏஜென்சிகள், பணம் கொடுத்தால் மட்டுமே பொருட்களை கொடுப்போம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆகவே, உங்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் நிதி இல்லை. இதனால் கடன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதேபோல, நீங்களும் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். மாதா மாதம் கடை வாடகை, ஆட்கள் சம்பளம், மின் கட்டணம் என செலவுகள் உள்ளதால், கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அச்சிடப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துவிட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக