நக்கீரன் : கோடைக்காலம் நெருங்கும் காலகட்டத்தில் புலி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் வனத்தை ஒட்டியுள்ள கிராமப் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகும்.
ஆனால், ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்கு வந்த புலி உயிரிழந்த நிலையில், புலியை கிராம மக்கள் சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது ஆக்கப்பள்ளம் கிராமம். வனப்பகுதியை ஒட்டிய இந்தப் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி வனவிலங்குகள் படையெடுத்து வருவதும்,
அங்குள்ள பயிர்களை சேதம் செய்வதும் வாடிக்கையாம். இதனைத் தவிர்ப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் புலி ஒன்று அந்தப் பகுதியில் நடமாடியது. இதனையறிந்த வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சில பகுதிகளில் கேமராக்களை பொருத்தி இருந்தனர். ஆனால், நடமாட்டத்தில் இருந்த புலியானது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதில் அதைவிட அதிர்ச்சி தரும் விதமாக மின்வேலியில் சிக்கி உயிரிழந்த புலியை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டிருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த புலியின் இறைச்சியை பங்கு போட்டுக் கொள்வதில் அந்த கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக இந்த விவகாரம் வனத்துறைக்கு புகாராக சென்றதைத் தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் புலியின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 12 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக