வியாழன், 9 பிப்ரவரி, 2023

இலங்கையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக அண்ணாமலை- வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

 tamil.oneindia.com  - Mathivanan Maran  :  யாழ்ப்பாணம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இலங்கையின் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் எல்.முருகன், அண்ணாமலையை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
இலங்கை சென்றுள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைக்க உள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி வரை இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எல். முருகன் கலந்து கொள்ள உள்ளார்.
இந்திய அரசின் நிதி உதவி மூலம் கட்டப்படும் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார்.
இந்த மையம் இந்தியா இலங்கை இடையேயான மேம்பட்ட நல்லுறவிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்.
மேலும் வடக்கு மாகாண மக்களின் கலாச்சார உட்கட்டமைப்பிற்கான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைய உள்ளது.
இந்த மையம் அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு வசதியுடன் கூடிய அரங்கம் 11 தளங்களுடன் அமைய உள்ளது.


தொடர்ந்து இந்தியாவின் பங்களிப்புடன் மக்கள் நலன் தொடர்பாக இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் எல்.முருகனுடன் தனிப்பட்ட பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அண்ணாமலை சந்தித்து பேசுகிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தரும் என நம்பப்படுகிறது 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
ஆனால் 13-வது சாசன திருத்தம் என்பது அதிகாரப் பகிர்வு தரக் கூடியதே அல்ல. ஏமாற்று என்கிறது தமிழர் தரப்பு. அதேநேரத்தில் 13-வது சரத்தை அமல்படுத்துவது என்பது பிரிவினைவாதத்தை ஊக்கப்படுத்தும் என்கிறது சிங்கள தரப்பு.
இதனால் ரணில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர் சிங்களர்கள். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையிலான இலங்கை குழு சென்றிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பயணம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த மாண்புமிகு இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களுக்கு பாரம்பரிய வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Union Minister L Murugan, Tamilnadu BJP President Annamalai visited to Sri Lanka today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக