ஞாயிறு, 22 ஜனவரி, 2023

கடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்பாடுகள் God With Extra Fittings.. வாழ்வியல் சிந்தனைகள்

ராதா மனோகர் : எமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு எம்மோடு பிரிக்கவே முடியாத வாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை.
இந்த கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை .
இதனோடு கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கிறது.
இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளது.
பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான நம்பிக்கைகளின் கூட்டு சாம்பாராக ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் எமது தலையில் சுமக்கின்றோம்.
அனேகமாக எமது வாழ்வின் குழப்பங்களுக்கு இந்த சாம்பார்தனமான நம்பிக்கை கோட்பாடுகள்தான் காரணம்,
இதை விளங்கி கொள்வது இலகுவல்ல. கடவுள் என்று நாம் கருதிக்கொண்டு இருக்கும் கடவுள் ஏழைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர்.,


 ஏழைகளுக்கு மிகவும் அருகில் இருக்கிறார்,
. பணக்காரர்களுக்கு மிகவும் தூரத்தே இருக்கிறார் என்று ஏறக்குறைய எல்லா சமயங்களும் கூறுகின்றன. இது மிகவும் தவறான கோட்பாடாகும்.
சமயவாதிகள் எல்லோருமே இந்த கருத்தை கொண்டுள்ளனர்.
இவர்களை பின்பற்றும் மக்கள் நாம் எவ்வளவு ஏழையாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கடவுளுடன் இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்.

இங்கே கடவுள் விருப்பம் அல்லது கடவுள் நம்பிக்கை என்ற கருத்து தானாகவே ஏழ்மை விருப்பம் அல்லது ஏழ்மையே பாதுகாப்பு நம்பிக்கை என்றவிதமாக எமது உள்ளுணர்வில் எமது ஆத்மாவில் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மிக அழுத்தமாக பதியப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படி பணக்காரராக முடியும்?

கடவுளையும் வறுமையையும் கலக்காமல் பார்க்ககூடிய அறிவும் சுபாவமும் உங்களிடம் இருக்குமாயின் நீங்கள் உண்மையில் பாக்கியசாலிகள்தான். வறுமையை விரும்பும் கடவுளுக்கு அடுத்த படி நாம் கவனிக்க வேண்டிய விடயம் துன்பமும் கடவுளும் என்பதாகும். துன்பத்தில் உழல்பவர்க்கு கடவுள் மிக அருகில் இருக்கிறான் எவ்வளவு நாம் துன்பாபடுகிரோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கடவுள் எம்முடனே குடியிருக்கிறார். துன்பத்தில் துணைவன் என்ற பதம் துன்பத்தில் தான் இறைவன் துணையாயிருப்பான். இன்பத்தில் அல்ல என்ற அர்த்தத்தை தந்து விடுகிறது

இதை விசுவாசமாக நம்புமாறு சமயங்கள் எம்மை பழக்கி விட்டன. துன்பம் எம்மை இறைவன் பால் சேர்க்கும், இன்பம் எம்மை இகலோக மாய வலைக்குள் தள்ளி பாப குழியில் தள்ளி விடும் இறைவனும் சந்தோஷமும் இரு வேறு துருவங்கள் என்ற கோட்பாடு எம்மீது பலமாக திணிக்கப்பட்டுள்ளது இதன்படி இறைவனை வேண்டுமென்றால் துக்கமாக இரு என எமது உள்ளுணர்வில் ஆழமாக பதியப்பட்டு எம்மையும் அறியாமலே துன்பத்தை காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் நம்மை நோக்கி ஈர்த்துவிடுகிறோம். எவை எவையெல்லாம் இன்பமானவையோ அவை அவையெல்லாம் இறைவனுக்கு உகந்தவை அல்ல. இந்த கோட்பாடு எமது உள்ளுணர்வில் (unconcsious mind ) ஊறவைக்கப்பட்டுள்ளது, எனவேதான் இறைவனை அதிகமாக நாடுபவர்கள் தம்மை அறியாமலேயே துன்பத்தையும் ஈர்த்து விடுகிறார்கள்.

எவை எல்லாம் தெய்வீகம் என்று புரியாமையே இந்த தவறுக்கு காரணமாகிறது. இவற்றுக்கு அடுத்த படியாக பயம் என்பது பக்தியோடு பிணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாபெரும் தத்துவார்த்த மோசடியே கால காலமாக இடம்பெற்று வருகிறது. பயமும் அன்பும் இருவேறு துருவங்கள், ஆனால் சமயவாதிகளோ பயம் என்பது நமது தன்னடக்கம் அல்லது இறைவன் மீது நாம் கொண்டுள்ள பக்தி/ அன்பு என்பதாக அர்த்தப்படுத்தப்பட்டு உள்ளது,

பயம் இருந்தால் அன்பு இருக்காது அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்காது. இறைவனை நினைக்கும் போது பயம் தான் பலருக்கும் வருகிறது. ஆனால் அதையே அன்பு அல்லது பக்தி என்ற சொற்களால் திரிபு படுத்தி ஒரு ஏமாற்று நாடக பாத்திரங்கள் ஆகிவிடுகிறோம். இதன் காரணமாக இறை வழிபாடு செய்பவர்கள் அனேகமாக அடி மனதில் ஒரு பயத்தை மூடி வைத்திருக்கிறார்கள்.

பயத்தினால் அடக்கி வைக்கப்பட்ட மனதில் ஒரு போதும் அன்போ சாந்தியோ அமைதியோ ஏற்படமாட்டாது. வழிபாட்டு ஸ்தலங்களில் உள்ளவர்கள் மிகவும் கோபக்காரர்களாக சொந்த வாழ்வில் அமைதி அற்றவர்களாக அதிகம் சச்சரவுகளில் சிக்குபவர்களாக இருப்பது இதனால்தான். ஆயுதங்களை வைத்திருக்கும் சுவாமி சிலைகளை சிருஷ்டித்ததன் நோக்கம் இதுதான். வெறும் பயத்தை உண்டாக்குதல், பின்பற்றுபவர்கள் எவ்வளவு தூரம் பயப்படுகிறார்களோ அவ்வளவு தூரம் அன்பை இழப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக