ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தமிழ்நாடு அரசின் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் - அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணம்!

 bbc.com- பிரமிளா கிருஷ்ணன் :  தமிழ்நாடு அரசின் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் - அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - BBC News தமிழ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரிந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சிறுவனின் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த கூர்நோக்கு இல்லம் குறித்து அங்கு முன்னர் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.


இறந்த சிறுவனின் தாயார் பிரியா, சிறார் இல்லத்தில் தனது மகனுக்கு மோசமான அனுபவம் இருந்ததாகவும் மர்மமான முறையில் தாக்கப்பட்டு தனது மகன் இறந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய இறந்த சிறுவனின் தாயார் பிரியா தனது மகனைக் கடைசியாகச் சந்தித்த தருணத்தில், தன்னை முடிந்தவரை விரைவில் ஜாமீனில் எடுக்கவேண்டும் என்றும், செங்கல்பட்டு இல்லத்தில் நடக்கும் 'விஷயங்கள்' மிகவும் அச்சம் கலந்தவையாக இருப்பதாகவும் சொல்லியதாகத் தெரிவித்தார்.

செங்கல்பட்டு இல்லத்தில் முன்னர் பணிபுரிந்த அனுபவமுள்ள அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, சிறுவர்கள் சிலர் தங்களைத் தாக்க வந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஒரு சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ள காரணங்களால் அவர்களைச் சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் நேரத்தில் தங்களுக்கும் ஆபத்துகள் இருந்ததாகத் தெரிவித்தனர்.

ஒரு சில சிறார்கள், இல்லத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்று திட்டமிட்டு அதிகாரிகளைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன என்கிறார்கள்.

பாதுகாப்பு கருதி பிபிசி தமிழிடம் பேசிய அதிகாரிகள், கூர்நோக்கு இல்லத்தில் முன்னர் தங்கியவர்கள், இளைஞர் நீதி குழுமம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

செங்கல்பட்டு இல்லம் கவனம் பெறுவது ஏன்?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைத் திருத்துவதற்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட பழைமையான சீர்திருத்த பள்ளிகளில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லம்.

1900களில் இருந்து செயல்பட்டு வரும் செங்கல்பட்டு இல்லத்தில், ஒன்றிணைந்த மதராஸ் மாகாணமாக இருந்த பகுதிகளில் இருந்து தண்டனை பெற்ற ஆயிரக்கணக்கான சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகும்கூட, 1970களின் தொடக்க காலம் வரையில், செங்கல்பட்டு இல்லத்தில், கேரளா, ஆந்திரா பிரதேஷ், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தண்டனை பெற்ற சிறுவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்று 1970களில் அந்த இல்லத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி ஒருவர் நம்மிடம் உறுதிப்படுத்தினார்.

''நான் பணிபுரிந்த காலகட்டத்தில் 1,200 சிறுவர்கள் அங்கு இருந்தார்கள். அண்டை மாநிலங்களில் இருந்து சிறுவர்களை அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் இங்கு கொண்டு வந்து ஒப்படைப்பார்கள்.

அந்தந்த மாநில அரசுகள் தமிழக அரசுக்கு இந்த சிறார்களை பராமரிப்பதற்கான செலவுக்கான நிதியை அளித்துவிடுவார்கள். 1970களின் பிற்பகுதியில்தான் பிற மாநிலங்களில் தனியாக சிறார் கூர்நோக்கு இல்லங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், இதுவரை அங்கு சிறுவர்கள் இறந்து போனதற்கான தரவுகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை,'' என்று அந்த முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

சிறார் சிறையாக இருந்த செங்கல்பட்டு இல்லம்
ஆரம்பக்கட்டத்தில் சிறார் சிறை என்று அறியப்பட்ட இந்த இல்லம், பின்னர் 'அப்ரூவர்' ஸ்கூல் என்று அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் அதை சீர்திருத்தப் பள்ளி என்றார்கள்.

தற்போது சிறார் கூர்நோக்கு இல்லம் மற்றும் சிறார் சிறப்பு இல்லம் என இரண்டு பிரிவாக அந்த இல்லம் செயல்பட்டு வருகிறது என்கிறார் ஒரு முன்னாள் அதிகாரி. குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணை நடைபெறும் நேரத்தில் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள். அவர்கள் மீது குற்றம் நிரூபணம் ஆகிவிட்டால், அவர்களின் தண்டனை காலத்தை சிறப்பு இல்லத்தில் கழிக்கவேண்டும் என்பதுதான் நடைமுறை.

''ஒரு கட்டத்தில் சிறார் இல்லம் முழுநேர கல்விக் கூடமாகவும் மாறியது. பல மாணவர்களுக்கு கல்வியைத் தொடரும் வாய்ப்பை அளித்தது. காலப்போக்கில், தண்டனை பெற்று வந்த சிறுவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறமைகளை வளர்க்கும் இடமாகவும் மாறியது.

பாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட கலை படிப்புகளும் கற்பிக்கப்பட்டன. ஒரு சில சிறுவர்கள், இந்த இல்லத்தில் இருந்த நூலகத்தைப் பயன்படுத்தி, திறமைகளை வளர்த்துக்கொண்டார்கள். ஆனால், ஒரு சிலர், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் மீண்டும் சிறார் இல்லத்திற்கு வருவதையும் வாடிக்கையாகவும் வைத்திருந்தனர்,'' என்கிறார் அவர்.

சிறார் இல்லத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடப்பது குறித்து சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

''நாங்கள் சிறுவர்களைத் திருத்துவதற்குப் பல முயற்சிகளைச் செய்வோம். கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்களை நான் நேரடியாகக் கையாண்டிருக்கிறேன்.

தனது வழக்கைப் பற்றிய அச்ச உணர்வு மேலிட்டு, அவர்களில் ஒரு சிலர் அமைதியாக இருந்துவிடுவார்கள். 25 ஆண்டு கால அனுபவத்தில் நான் பார்த்தவரை, தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள் ஆபத்தானவர்கள்.

மனம் திருந்தி வாழவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு சுலபத்தில் வருவதில்லை. சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்துகொண்ட சில சிறுவர்கள், தொடர்ச்சியாக சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு, எங்கள் இல்லத்திற்கு வருவார்கள்.

அதுபோல பலமுறை இல்லத்திற்கு வந்த சிறுவன் ஒருவன் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினான். என் தாயார், மனைவி, பிள்ளைகளைக் கொச்சைப்படுத்தி பேசினான்.

இதுபோன்ற பேச்சுகளால், நாம் ஆத்திரப்பட்டு, அவர்களை அடிக்கும் போது, தப்பித்து ஓட முயல்வார்கள். என்னிடம் வாக்குவாதம் செய்த சிறுவனை ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை. நான் அவனை பிரம்பால் அடித்திருக்கிறேன். அது தவறுதான். ஆனால் அவன் அன்று இல்லத்தில் இருந்து தப்பித்து ஓடுவதை நான் தடுப்பதற்கு வேறு வழி தெரியவில்லை,'' என்கிறார் அந்த முன்னாள் அதிகாரி.

2015இல் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகளைத் தாக்கிவிட்டு, தப்பிச் சென்ற சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செங்கல்பட்டு இல்லத்தில் நடந்த மரணம்
இதுவரை பலமுறை செங்கல்பட்டு இல்லத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இடையில் தகராறு நடைபெற்றது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல, மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியது, அதிகாரிகளைத் தாக்கியது போன்ற புகார்களும் பதிவாகியுள்ளன என்று பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

சிறார் இல்லத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையான சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சொல்கிறார் அவர்.

தனது அடையாளத்தைச் சொல்ல விரும்பாத அந்த அதிகாரி, சமீப காலங்களில், செங்கல்பட்டு இல்லத்திற்கு வரும் சிறார்களை அதிகாரிகள் ரேகிங் செய்துள்ளார்கள் என்ற தகவலை வருத்தத்துடன் சொல்கிறார்.

''செங்கல்பட்டு இல்லத்திற்கு வரும் சிறுவர்கள் மீது அதிகாரிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று தற்போதுதான் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

அட்மிசன் அடி என்ற பெயரில் முதலில் கூர்நோக்கு இல்லத்தின் அதிகாரிகள் ஒவ்வொருவராக, பணிக்கு வந்தவுடன் அன்றைக்குப் புதிதாக வரும் மாணவனை முதலில் அடிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தற்போது இறந்த சிறுவனின் விஷயத்தில், அவன் டிசம்பர் 30ஆம் தேதி இல்லத்திற்கு வருகிறான், 31ம் தேதி இறந்துபோகிறான். தொடர்ந்து அடி வாங்கியதால்தான் சிறுவன் இறந்துபோனதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த மரணத்தை வலிப்பு வந்து சிறுவன் இறந்ததாக முதலில் எங்களுக்குத் தகவல் சொன்னார்கள்.

ஆனால் அதிகாரிகள் அடித்ததால்தான் சிறுவன் இறந்துள்ளார் என்பதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன,'' என்கிறார் அந்த அதிகாரி.

மேலும் சிறுவன் இறந்தவுடன், அவனுடைய அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களுக்கு உடனே ஜாமீன் எடுக்கப்பட்டது என்பதால் சிறார் இல்ல அதிகாரிகள் மீதான சந்தேகம் வலுத்தது என்கிறார் அவர்.

''அங்கு சிசிடிவி வைக்கப்படவில்லை. இதுவே ஒரு பெரிய விதிமீறல்தான். பல உயரதிகாரிகள் இதில் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதால், இந்த வழக்கு எங்கள் துறைக்கு ஒரு பெரிய சுமையாக மாறியுள்ளது,'' என்கிறார் அவர்.

சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ள சிறார்கள் தங்கியுள்ள அரசு இல்லங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்ற குழு வெளியிட்டது.

நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான அந்தக் குழுவின் அறிக்கையில், அரசாங்கத்தால் நடத்தப்படும் சிறார் இல்லங்களில் கிட்டத்தட்ட 40% குழந்தைகள் 'வருந்தத்தக்க' சூழ்நிலையில் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு சில இல்லங்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் சிறையைவிட மோசமான நிலையில் இருந்தது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டத்தில், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சிறார் இல்லங்களிலும் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல செயற்பாட்டாளர் மற்றும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் பிபிசி தமிழிடம் பேசியபோது, சிறுவன் இறந்த பின்னர், இல்லத்தில் ஆதாரங்களை மறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

''சிறுவனின் கொலையில் தொடர்புள்ள அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்து வருவதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. பல உயரதிகாரிகள் சிறார் இல்ல அதிகாரிகளைக் காப்பாற்ற மறைமுகமாக தலையீடு செய்து வருகிறார்கள்.

இந்தக் கொலைக்குப் பின்னராவது, சிறார் இல்லங்களில் நடைபெறும் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் குறித்து அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, இல்லங்களைப் பாதுகாப்பான இடங்களாக மாற்றவேண்டும்,'' என்றார் ஆசீர்.
செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் நடந்த மரணம் குறித்தும், அதிகாரிகள் கைதாகியுள்ளது குறித்தும் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை அமைச்சகத்தின் பதில்களைப் பெறுவதற்காக, அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம்.

சிறார் இல்லத்தில் அதிகாரிகள் சிறுவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் 'அட்மிசன் அடி' என்ற நடைமுறை இருந்தது குறித்தும் கேட்டோம்.

அமைச்சர் கீதா ஜீவன், இது குறித்து தன்னுடைய கவனத்திற்கு எந்த விவரமும் இதுவரை வரவில்லை என்றும் பிபிசி தமிழ் அளித்த விவரத்தைப் பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்.

''சிறார் இல்ல அதிகாரிகள் சிறுவனின் கொலையில் ஈடுபட்டதாகத் தெரிந்ததும், அவர்களைக் கைது செய்துவிட்டோம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ உடனடியாக அதில் கவனம் செலுத்தியுள்ளோம். நீங்கள் கொடுத்த 'அட்ம்சன் அடி' தகவலைப் பற்றி விரிவாக விசாரிக்கிறோம். மற்ற இல்லங்களிலும் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளதா என்றும் விரிவாக விசாரிக்கிறோம்,'' என்றார்.

இறந்த சிறுவனின் தாயார் பிரியாவை சிறார் இல்ல அதிகாரிகள் கடத்தியதாக எழுப்பப்பட்டுள்ள குற்றசாட்டு குறித்துக் கேட்டபோது, ''தாயார் பிரியாவின் புகாரை ஏற்றுள்ளோம். தற்போது சிறுவனின் இறப்பு குறித்து கவனித்து வருகிறோம். தாயார் பிரியாவிற்கு ஏற்பட்ட பிரச்னை பற்றியும் விசாரணை நடைபெறும்,'' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக