திங்கள், 9 ஜனவரி, 2023

ஆளுநர் உரையை விமர்சித்த முதல்வர், பாதியில் வெளியேறிய ஆளுநர்- தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன நடந்தது?

  BBC News தமிழ்  : "ஆளுநர் உயர் பதவி ஆசையால் இப்படி பேசுகிறாரா எனத் தெரியவில்லை" - சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி முழுமையாகப் படிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து பேரவை முடிவதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து ஆளுநர் தனது உரையைத் தொடங்க முயன்றபோது, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


தமிழ்நாடு தொடர்பான அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக,  `புறக்கணிப்போம் புறக்கணிப்போம் ஆளுநர் உரையை புறக்கணிப்போம்` என்றும், `வாழ்க தமிழ்நாடு` என்றும் கோஷங்களை எழுப்பியதோடு, உரையை புறக்கணித்து வெளியேறினர்.

"பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி  உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது," என்ற வரியை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்ற உரையிலிருந்து புறக்கணித்துள்ளார்.
ஆளுநர் தனது உரையில், மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சமத்துவபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவது, காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை  உயர்ந்துள்ளது, குறைந்த நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது என அரசின் திட்டங்கள் குறித்து சுமார் 50 நிமிடங்களுக்குப் பேசினார். தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசித்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார்.

ஆளுநர் தவிர்த்த பகுதிகள் என்ன?

ஆளுநர் தனது உரையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பத்தியை வாசிக்காமல் தவிர்த்துள்ளார். இதேபோல்,  உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் அவர் வாசிக்காமல் தவிர்த்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

இதைத் தொடர்ந்து அவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆளுநர் உரையானது தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.

பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்பு சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்த ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்துகொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

சபையில் இருந்து வெளியேறிய ஆளுநர்.

மேலும், சட்டமன்றப் பேரவை விதி 17ஐ தளர்த்தி, அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும்.

இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்ற தீர்மானங்களை முன்மொழிவதாகவும் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பேரவை முடிவு பெறுவதற்கு முன்பே, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

அதிமுக- பாஜக கருத்து என்ன?

முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர், சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையைத்தான் கேட்க வந்தோம். முதல்வர் உரையை அல்ல. ஆளுநர் பேரவையில் இருக்கும்போது முதல்வர் பேசுவது என்பது அவை மரபுக்கு எதிரானது. ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆளுநர் வாசித்தது வெற்று உரை,” என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வாரிசு அரசியலைப் பற்றி மக்கள் அதிகம் பேசாமல் பார்த்துகொள்ளவும், ஆளுநருக்கு எதிர்ப்பு என்ற கேவலமான நாடகத்தை இன்றே அரங்கேற்றியுள்ளனர்.

ஆளுநரை தங்களின் சித்தாந்தத்தைப் புகழ்பாடும் நபராக இந்த அரசு நினைக்க முடியாது. எவையெல்லாம் அரசின் திட்டங்களோ, செயல்களோ அதைத்தான் ஆளுநர் குறிப்பிடுவார். ஆளுங்கட்சியின் போக்கு மாநில நலனுக்கு எதிரானது. ஆளுநர் மீதான தனிப்பட்ட தாக்குதல் இது. ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா?” என்று கூறினார்.

தேசிய கீதத்திற்கு அவமதிப்பு

இதனிடையே, அவை நிறைவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “சட்டப்பேரவை மரபுகளுக்கு முரணான வகையில் ஆளுநர் உரையை வாசித்துள்ளார் என்பதால்தான் முதல்வர் தீர்மானம் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதியே முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று ஆளுநர் உரையின் வரைவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7ஆம் தேதி அவர் ஒப்புதல் அளித்தார்.

அப்படியிருக்கும் சூழலில் அவர் இன்று படித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், சமத்துவத்துகாக போராடிய மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்துள்ளார்.

சமூக நீதி, சமத்துவம், பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய வார்த்தைகளை அவர் தவிர்த்துள்ளார்.  தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் வெளியேறியது, தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். தேசிய கீதம் வாசிப்பதற்கு முன்பாக அதிமுக வெளியேறியது தவறானது” என்று குறிப்பிட்டார்.

சபாநாயகர் கூறுவது என்ன?

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஜனவரி 13ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என்று அறிவித்தார். ஆளுநர் உரை சர்ச்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சபாநாயகர், “ஆளுநர் உரையில் பல பகுதிகளை விட்டும் புதிதாக சில பகுதிகளைச் சேர்த்தும் ஆளுநர் வாசித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது தவறு என்பதால் முதல்வர் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதை சபை முழு மனதாக ஏற்றுகொண்டது. மாநில சட்டமன்றங்களில் ஆளுநர் உரையாற்றுவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 175,176 அனுமதி வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அவருக்கு அந்த உரிமையை வழங்குகிறது.

அம்பேத்கர் தலைமையில்தான் அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.  அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. திராவிட மாடல் என்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாடு என்றுதான் உள்ளது. ஆனால் தமிழகம் என்று சொல்வதுதான் நன்றாக உள்ளது எனக் கூறுவது அவரது பதவிக்கு ஏற்புடையதா எனச் சிந்திக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் ஏன் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை,” என குறிப்பிட்டார்.

மேலும், "ஆளுநர் உரையை ஒப்புதலுக்கு அனுப்பியபோதே, சில வார்த்தைகளை நீக்குங்கள் என்று கூறியிருந்தால் அதற்கு ஏற்ப முதல்வரும் இந்த அரசும் நடவடிக்கை எடுத்திருக்கும்.

அதையெல்லாம் விடுத்து பொதுமேடைக்கு வந்துவிட்டுப் பேசுவது நியாயமல்ல. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்குகிறார்," என்றார்.

அதேபோல், "பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து செல்லும் தீர்மானங்களுக்கும் உடனடியாக ஒப்புதல் வழங்குகிறார். ஆனால், தமிழகம் போன்ற முற்போக்கு மாநிலங்களில் இருந்து கொடுக்கும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்கின்றனர்," என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.

ஆளுநரின் செயல் மன வருத்ததை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்த அப்பாவு, “உயர் பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆளுநராக இருப்பவர்கள் இவ்வாறு செய்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் ஆளுங்கட்சிக்கு விரோதமாக வெளிபடையாகச் செயல்பட்டார். அவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கிடைத்தது. அப்படி ஏதும் நோக்கம் உள்ளதா எனத் தெரியவில்லை,” என்ற விமர்சனத்தையும் அப்பாவு முன்வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக