திங்கள், 9 ஜனவரி, 2023

உத்தரகாண்ட் ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைகிறது... வீடுகளை விட்டு ஓடும் மக்கள்

 BBC News தமிழ் : உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் பகுதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், தங்கள் வீட்டிற்கு வெளியே வானமே கூரையாகத் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வியாழக்கிழமையன்று பத்ரிநாத் நெடுஞ்சாலையைப் பொதுமக்கள் மறித்து மாலையில் எரியும் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் செல்லும் அளவுக்கு மாநில அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஜோஷிமட்டில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி வேறு இடங்களுக்கு இடம் பெயரும் அளவுக்குத் திடீரென என்ன நடந்தது?
அங்கு நிலமே புதைந்து இடிந்து விழும் நிலை வரைக்கும் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலைக்கு வந்த பிறகுதான் அரசு கட்டுமானப் பணிகளை நிறுத்தியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


அங்கு இப்போதைய சூழலில், பேரிடர் மேலாண்மைப் படைகள் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமென்றும் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பல குடும்பங்கள் இடப் பெயர்வு

இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில், இதுவரை மொத்தம் 38 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜோஷிமட்டின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அபிஷேக் திரிபாதி தி இந்துவிடம், 'வியாழனன்று நான்கு குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அது மட்டுமல்லாமல், அனைத்து வகையான கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 38 குடும்பங்கள் சேதமடைந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளனர்” என்று அபிஷேக் திரிபாதி கூறியுள்ளார்.

நிர்வாகத்தின் நடவடிக்கை
ஜோஷிமட் நகரம் தரைமட்டமாகும் அபாயம் அதிகரித்து வருவதால் உள்ளூர் நிர்வாகம் முதல் மாநில அரசு வரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

ஜோஷிமட் நகரின் பல வீடுகளின் சுவர்களிலும் கட்டடங்களிலும் விரிசல் தொடர்ந்து பெரிதாகி வருகிறது. இது கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இங்குள்ள சாலைகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியதால தற்போது நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அங்கு வாழும் மக்களின் கவலை அதிகரித்துள்ளது.

ஜோஷிமட் முனிசிபல் கார்ப்பரேஷனின் தலைவர் சைலேந்திர பன்வார் வியாழக்கிழமை கூறுகையில், "இந்த விரிசல்கள் ஒவ்வொரு மணி நேரமும் பெரிதாகி வருவதால் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.

மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜோஷிமட் நகரில் உள்ள என்டிபிசியின் தபோவன் விஷ்ணுகர் நீர்மின் நிலையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஹெலாங் பைபாஸ் சாலை பணியும் ஆசியாவின் மிக நீளமான ரோப்வேயான 'ஆலி ரோப்வே' இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜோஷிமட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், என்டிபிசியின் அவசரமான கட்டுமானம் குறித்த தங்களின் எச்சரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
போராடும் மக்களின் கேள்வி
ஜோஷிமட் பச்சாவ் சங்கர்ஷ் சமிதியின் கன்வீனர் அதுல் சதி, "நிலமே புதைந்து இடிந்து விழும் நிலையில் தான் அரசு கட்டுமானப் பணிகளை நிறுத்தியுள்ளது. இது, முன்னரே கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம் அல்லவா?” என்று கேட்கிறார்.

தபோவன் விஷ்ணுகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுரங்கப்பாதைக்காக பூமியில் குழி பறிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக டவுன் டு எர்த் ஊடகத்திடம் பேசிய அதுல் சதி கூறியுள்ளார்.

ஜோஷிமட்டின் இரண்டாவது வார்டு, மார்வாரி வார்டு பகுதிகளில் பூமியிலிருந்து சேறு வெளியேறுவதைக் கண்ட உள்ளூர் மக்களின் கவலை மேலும் அதிகரித்தது. மலையில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் இருந்து இந்த மண் கசிந்து வருவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்தப் பகுதியை ஆய்வு செய்யும் புவியியலாளர் எஸ்.பி.சதி கூறுகையில், மார்வாரியில் வெளியேறும் தண்ணீரை, தபோவனத்தில் உள்ள தவுலகங்கை நீருடன் தான் பொருத்திப் பார்க்க முடியும் என்று கூறுகிறார். என்டிபிசியின் தபோவன் விஷ்ணுகரின் சுரங்கப்பாதை திட்டம் தொடங்கும் இடம் இது.

தபோவன், ஜோஷிமட்டில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. ஜோஷிமட்டில் இருந்து ஐந்து கிமீ தொலைவில் செலாங்கில் சுரங்கப்பாதை தொடங்குகிறது.

முன்னரே இளகிய நிலம்
உள்ளூர் மக்களுடைய வேண்டுகோளின் பேரில், ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த நவீன் ஜூயல், சுப்ரா சர்மா ஆகியோருடன் எஸ்பி சதி இந்தப் பகுதியில் விரிசல் ஏற்பட்ட நிலத்தை ஆய்வு செய்தார்.

ஜோஷிமட்டை சுற்றியுள்ள சரிவுகள் மிகவும் நிலையற்றதாக மாறிவிட்டதாக இந்த விஞ்ஞானிகள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டில், நீர்மின் திட்டம் தொடர்பான சுரங்கப்பாதைகள் உத்தரகாண்டில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று கவலைகள் எழுப்பப்பட்டதாக சதி கூறுகிறார். அந்த ஆண்டு இந்தத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

ஜோஷிமட் நகராட்சி கடந்த டிசம்பரில் நடத்திய ஆய்வில் 2,882 பேர் இந்த வகையான பேரிடரால் பாதிக்கப்படலாம் என்று கண்டறிந்துள்ளனர். இதுவரை 550 வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அதில் 150 வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் நகராட்சித் தலைவர் சைலேந்திர பன்வார் தெரிவித்தார்.

இது மட்டுமின்றி, பிப்ரவரி 7, 2021 அன்று நடந்த சமோலி பேரழிவுக்குப் பிறகு, நீத்தி பள்ளத்தாக்கு முழுவதும் நில விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021ஆம் ஆண்டில், ஜூன் முதல் அக்டோபர் வரை பெய்த கனமழைக்குப் பிறகு, சிப்கோ இயக்கத்தின் நாயகியாக இருந்த கௌரா தேவியின் ரேணின் கிராமத்தில் நில விரிசல் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

முன்னதாக 1970ஆம் ஆண்டிலும், ஜோஷிமட்டில் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டன.
இந்த இயற்கை பேரழிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய கர்வால் கமிஷனர் மகேஷ் மிஸ்ரா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு 1978ஆம் ஆண்டு தனது அறிக்கையில் ஜோஷிமட், நீத்தி மற்றும் மானா பள்ளத்தாக்கு மொரைன்ஸ் ஆதாரத்தில் இருப்பதால், இப்பகுதிகளில் பெரிய கட்டுமானத் திட்டங்களை நடத்தக்கூடாது என்று கூறியிருந்தது. மொரைன்ஸ் என்பது பனிப்பாறை உருகிய பின் எஞ்சியிருக்கும் பகுதிகளைக் குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக