ஞாயிறு, 8 ஜனவரி, 2023

தமிழ்நாடு, தமிழகம் வேறுபாடு கிடையாது.! பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்? திருமாவளவன் விளக்கம்

nakkeeran :  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி
தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” எனப் பேசியிருந்தார்.
இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “சென்னை இலக்கியத் திருவிழா - 2023’ சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த இவ்விழா மூன்று நாட்கள் நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது.

இன்று இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
 அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இம்மாதிரியான
நிகழ்வை ஒருங்கிணைப்பதே நல்ல விஷயமாகப் பார்க்கின்றேன்.
இலக்கியம் மற்றும் கலைகள் சார்ந்த ஆளுமைகளுடன் இளைஞர்கள் உரையாடுவது மிக நல்ல விஷயம். இது சமூகத்தில் மிக முக்கியமான நிகழ்வு. தமிழ்நாடா தமிழகமா எனக் கேட்கின்றனர். தமிழ்நாடு தான்” எனக் கூறினர்.


tamil.asianetnews.com: தமிழ்நாடு தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் கிடையாது. அம்மா என்பதற்கும் தாய் என்பதற்கும் ஒரே பொருள் தான் உள்ளது. - தொல் திருமாவளவன்.

நெல்லை, பாளையங்கோட்டை தூய  சவேரியார் கல்லூரியில் வைத்து மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய திருமாவளவன், பொங்கல் பண்டிகை அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் விழா.  இந்த விழா சமூக சமத்துவ நல்லிணக்க திருவிழாவாக திகழ்கிறது மதச்சார்பற்ற புராணக்கதை பின்னணி இல்லாமல் எந்த வித பிணைவும் இல்லாமல் கலாச்சாரத்தை பேசும் விழாவாக திகழ்ந்து வருகிறது. நல்லதுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் வெறுப்பு அரசியலை பரப்புவதற்கு இணக்கமாக இருக்கக் கூடாது.

தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும்,  அம்மா என்றாலும் ஒரே பொருள் தான் உள்ளது. தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும் சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும், ராஸ்டரியம் என்றாலும் நாடு என்பதுதான் பொருள், இந்த தேசத்திற்கு இந்து ராஷ்டம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.

மகாராஷ்டிராத்தில் சென்று  பாரதம் என்று தான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா ? என்று கேள்வி எழுப்பினார். தமிழக முதலமைச்சருக்கு சிறுபான்மையினர் சமூக மக்கள் தன்னிடம் வைத்த கோரிக்கையை முன் வைக்கிறேன். அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படுவதில்லை என அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன் அங்கீகாரம் கிடைத்த பள்ளிகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என்று கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக