புதன், 25 ஜனவரி, 2023

ஐஸ்வர்யா ராஜேஷ் : பெண்கள்னா தீட்டா? சாமி சொல்லுச்சா?

 மின்னம்பலம் - Kavi : சபரிமலையில் பெண்களுக்கு மறுப்பு தொடர்பாகப் பேசியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவர்கள் தான் கோயிலுக்கு வர வேண்டும், இவர்கள் எல்லாம் வரக்கூடாது என சாமி ஒன்றும் சட்டம் இயற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்.
தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் ட்ரெய்லரில், “அப்பாதான் தலைவர். அம்மாதான் வீட்டை பார்த்துகொள்ள வேண்டும் என வகுப்பறையில் வாத்தியார் பாடம் எடுக்க, அப்போதே ஒரு மாணவி ஏன் சார் இரண்டு பேருமே குடும்பத் தலைவராக இருக்கக் கூடாதா?” என கேள்வி எழுப்புகிறார்.
அதோடு, “கட்டிலில் உட்காரக் கூடாதுனு தெரியாதா?.. தீட்டும்மா… என மாமியார் சொல்லும் வசனமும், சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் கணவர் இதுபோன்ற சமயத்தில் சாமியைத் தொடக் கூடாதுனு உனக்கு தெரியாதா? என கோபப்படுவதும் ட்ரெய்லர் காட்சியில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படக்குழுவினர் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
aishwarya rajesh speak about sabarimalai issue and untouchability

அப்போது, இந்த படம் ஆணாதிக்கம் பற்றி பேசுகிறது. ஆணாதிக்கம் இன்றளவும் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“கண்டிப்பாக உள்ளது. கிராமங்களில் நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சமையலறையோடு பெண்களின் வாழ்க்கை முடிந்துவிடாமல். அவர்களது திறமை வெளிவர வேண்டும். இது முக்கியமான படம். எல்லோரும் பார்க்கக் கூடிய படம்”.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்பான கேள்விக்கு, ”கடவுள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். என்னை பொறுத்தவரை ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை. எந்த கடவுளுமே இவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும், இவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.

அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறதா என சொல்லுங்கள் பார்ப்போம். சபரிமலை என்று கிடையாது. வேறு எந்த கோயிலிலும் கடவுள் இது செய்யக் கூடாது, இப்படி செய்யக் கூடாது , இது சாப்பிடக் கூடாது, தீட்டு என்று எந்த சட்டத்தையும் வைக்கவில்லை. எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது.

மாதவிடாய் காலங்களில் தீட்டு, கீட்டு என்கிறார்கள். அதெல்லாம் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள். அதையும் நம்புகிறார்கள். எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை” என்றார்.

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக