செவ்வாய், 10 ஜனவரி, 2023

ஓவியர் ராஜா ரவிவர்மா கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட மக்களுக்காகவே கடவுள் ஓவியங்களை தீட்டினார்

Image result for raja ravi varma
GO 4 GK GREAT INDIANS: Raja Ravi Varma
Indran Rajendran  :  ஓவியர் ராஜா ரவிவர்மாவும் ஜனநாயகப்படுத்தப்பட்ட இந்துக் கடவுள்களும். 
 19ஆம் நூற்றாண்டில் கோயில்களில் இருந்த இந்துக் கடவுள்களை எல்லோரும் சென்று தரிசிக்க முடியாதபடி ஆலயங்களின் கதவுகள் கீழ்சாதியினருக்கு மூடப்பட்டு இருந்தன.
அப்போது கேரளத்து ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ல‌ஷ்மி, சரஸ்வதி, ராமர் பட்டாபிஷேகம், சிவன், பார்வதி, விநாயகர், முருகன் மயில்மேல் குடும்பமாக இருப்பது போன்ற ஓவியங்களின் ஓலியோகிராஃப் அச்சுப் பதிவுத் தொழில்நுட்பம் அந்த புனிதமான கடவுள்களை காலண்டர்களிலும்,
சோப்பு விளம்பரங்களிலும் அச்சிட்டு அவர்களை மத்தியதர வர்க்க கீழ்சாதியினரின் வீடுகளுக்குள்ளும் குடிசைகளுக்குள்ளும் நுழைய வைத்தது. 1936இல் திருவனந்தபுரம் ஆலய நுழைவுப் போராட்டம் சாதிக்க முடியாததை ரவிவர்மாவின் ஓவியங்கள் சாதித்தன. கான்வஸில் மேல்நாட்டுக் கலைசாதனமாகிய தைல வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியங்களை அப்படியே காகிதத்தில் அச்சிடமுடியும் எனும் ஓலியோகிராஃப் தொழில்நுட்பம் ஜெர்மானியர்களால் பிரிட்டீஷ் இந்தியாவின் உள் நுழைந்து சாதித்துக் காட்டியது.
ரவிவர்மா ஓவியங்கள் பிரபலமாகி பலருக்குத் தேவைப்பட்டதால் திருவிதாங்கூர் திவான் சர் மாதவராவ் யோசனைப்படி ரவி வர்மா தன் கடவுள் ஓவியங்களை ஓலியோகிராஃபாகக் கொண்டுவர முயன்றார். இவ்வாறு   
சாதாரண மனிதர்களின் வீட்டுக்குள் இந்துக் கடவுள்களைத் தனது ஓவியங்களின் மூலமாக அழைத்து வந்து அவர்களை ஜனநாயகப்படுத்தியது தொழில்நுட்பம்.
இந்துக் கடவுள்களை கேரளத்துப் பெண்களின், ஆண்களின்  ஜாடையில் கூந்தல் அலங்காரம், உடையணியும் முறை, அமரும் முறை ஆகியவற்றின் சித்தரிப்புகளாலும் தஞ்சாவூர் ஓவியங்களின் அலங்காரங்களுடன்தைல வண்ணத்தில் உயிர்த்துடிப்புடன் படைத்தார் ராஜா ரவிவர்மா.
அவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே அவரை மேல்தட்டுச் சமூகம் இயல்பாக ஏற்றுக் கொண்டு போற்றிப் பாராட்டியது.
 
1848இல் திருவாங்கூர் கிளியமனூரில் ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜா ரவிவர்மா தனது 13வது வயதிலேயே திருவாங்கூர் மகாராஜாவின் அரண்மனை நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இருந்த ஓவியக்கலை பற்றிய மேல்நாட்டு ஓவியப் புத்தகங்களில் இத்தாலிய ஓவியர்களின் முப்பரிமாண ஓவியங்களைப் பார்த்த ரவிவர்மா தானும் அத்தகைய ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினார்.  

ரவிவர்மாவின் தந்தையார் வேத விற்பன்னர். தாய் முன்னேறிய பெண்மணி. அதனால்தான் சரஸ்வதி எனும் பெண் கடவுளை 19ஆம் நூற்றாண்டிலேயே கால் மேல் கால் போட்டு உட்கார வைக்கும் துணிச்சல் சிந்தனை அவருக்குத் தோன்றியது.
மலையாளம், சம்ஸ்கிருதம் , ஆங்கிலம் ஆகியவற்றையும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் நன்கறிந்திருந்தார் ராஜா ரவிவர்மா.
ஐரோப்பிய முறை ஓவிய நுட்பங்களை ராமசாமி நாயக்கர் எனும் அரசவை ஓவியர் கற்றுக் கொடுக்க மறுத்து விட்டார்.
அரசவையில் இருந்த  Theodore Jensen எனும் டச்சுக்கார ஓவியரும்  மேல்நாட்டு ஓவிய நுட்பங்களை ரவிவர்மா எனும் சிறுவனுக்குக் கற்றுக் கொடுக்க மறுத்து விட்டார்.
ஆனால் மகாராஜா வேண்டிக் கொண்டதின் பேரில் தியோடர் ஜென்சன் தான் ஓவியம் தீட்டும்போது தனக்குப் பக்கத்தில் இருந்து அவற்றைப் பார்க்க மட்டும் அனுமதி வழங்கினார்.
ரவிவர்மா மேல்நாட்டு யதார்த்தபாணி ஓவியங்களை மட்டுமின்றி தஞ்சாவூர் ஓவியங்கள், இசை, நடனங்கள் ஆகியவற்றையும் நன்கு கற்றார்.
ஓவிய நுட்பங்களில் கைதேர்வுக்கு 9 ஆண்டுகள் பிடித்தது அவருக்கு. 1888இல் ராஜா ரவிவர்மாவையும் அவரது சகோதரர் ராஜா ராஜவர்மாவையும் பரோடா மன்னர் கெய்க்வார்ட் தன் அரண்மனைக்கு அழைத்தார்.

ராமாயண மகாபாரதக் கதைகளை 14 ஓவியங்களாகப் படைக்க வைத்தார். ஆனால் இவை மன்னரின் தனிச் சொத்தாக இருந்ததால் ரவிவர்மா படைப்புகள் சாதாரண மக்களையும் சேர வேண்டும் என்பதால் ரவிவர்மா
1894இல் இந்தியாவில் மும்பையில் கோவர்தன் தாஸ் கட்டாவ் மக்கானி என்பவருடன் சேர்ந்து ரூ 50000 ரூபாயில் லிதோகிராஃப் அச்சுக்கூடம் ஜெர்மன்காரரான   

ஒருவர் உதவியால் ஒன்று நிறுவப்பட்டது.
 12 ஜூலை 1894இல் ரவிவர்மாவின் முதல் ஓலியோகிராஃப் ஓவியம் – சகுந்தலாவின் பிறப்பு எனும் ஓவியம் – அச்சிடப்பட்டு ஒரு படம் ஆறு ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதன் பிறகு ல‌ஷ்மி, சரஸ்வதி ஓவியங்கள் 2 ரூபாய்க்கு விற்கப்பட்டன. இவரது ஓவிய மாடலாக கோவா பெண்மணியான ராஜீவ்பாய் மூல்காவ்ங்கர் இருந்தார்,. 1898இல் மும்பை பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டபோது
அச்சகம் காட்கோபர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இறுதியாக அச்சகம் Fritz Schleicher  எனும் ஜெர்மானியருக்கு விற்கப் பட்டது.
அவர் ரவிவர்மாவின் இந்துக் கடவுள் படங்களை காலண்டர், அஞ்சல் அட்டை, சீட்டுக் கட்டு, தீப்பெட்டி அட்டை ஆகியவற்றில் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தினார்.
இதனால் பவித்திரப் படுத்தப்பட்ட இந்துக்கடவுள் உருவங்கள் ( HINDU ICONOGRAPHY ) தங்களுக்குள் கட்டப்பட்டிருந்த புனித பிம்பங்கள் எனும் தன்மையை வெகுவாக இழந்தன. சென்னையிலுள்ள சி.பி.ராமசாமி ஃபவுண்டேஷன் 130 ஓலியோகிராஃப்களைச் சேகரித்து வைத்துள்ளது.

தனது வயதில் சர்க்கரை நோயினால் 2 அக்டோபர் 1906இல் தனது 58 வயதில்  மரணித்த ராஜா ரவிவர்மா எனும் மகத்தான ஓவியர் ஒரு மாபெரும்  மௌனப் புரட்சியை தனது ஓலியோகிராஃபுகளால் நிகழ்த்தினார். இதற்கு 19 ஆம் நூற்றாண்டின் காலத்தில் இந்தியாவில் வந்த சமூக, அரசிய, மத சீர்திருத்தங்கள் பாதை போட்டுக் கொடுத்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக