திங்கள், 2 ஜனவரி, 2023

இந்தியா- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மார்ச்சில் தொடக்கம்- ரூட் எது என்பதில் விவாதம்!

 tamil.oneindia.com  -  Mathivanan Maran  ; யாழ்ப்பாணம்: இந்தியா- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தமிழகம் மற்றும் இலங்கை இடையே ரயில், கப்பல் மற்றும் விமான சேவை நீண்டகாலமாக இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் சேவைகள் இப்போது நடைமுறையில் இல்லை. விமான சேவையும் கொழும்பு வழியாகத்தான் இருந்து வருகிறது.
இதனால் தமிழகத்தின் தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து இலங்கையில் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வட மாகாணத்துக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரவில்லை. பின்னர் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் இடையேயான படகு அல்லது கப்பல் போக்குவரத்துக்கும் சென்னை- பலாலி விமான சேவைக்கும் இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்தது. சென்னை- பலாலி இடையேயான விமான சேவை தற்போது இயக்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பு வர்த்தகர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவு வியாபாரம் செய்து வருகின்றனர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட தமிழக வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

தற்போது தமிழக வர்த்தகர்கள் நலன் கருதியும் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்கள் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்த சேவை ஜனவரி மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது எந்த பாதை வழியாக இந்த கடல்வழி சேவையை இயக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்திய பயணிகளை எங்கே பரிசோதனை செய்வது? மன்னாரிலா? காங்கேசன்துறை துறைமுகத்திலா? என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.

மேலும் தமிழக அரசு அதிகாரிகளுடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தமிழக அரசு சிக்னல் கொடுத்துள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அடுத்த இரு மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இந்த கப்பல் சேவை தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இலங்கை காங்கேசன்துறை- காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து! இதோ கட்டணம்இலங்கை காங்கேசன்துறை- காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து! இதோ கட்டணம்


The Srilanka Government will launch a passenger ferry service between India and Srilanka Jaffna in March.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக