Justice Nagarathna |
minnambalam.com - christopher : பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை இன்று (ஜனவரி 2) தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த இந்த நடவடிக்கை செல்லும் என்று உத்தரவிட்டது.
இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்ற மோடி 2016ம் ஆண்டு பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ஒரே இரவில் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது.
கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த நடவடிக்கையால் சுமார் 85 சதவிகித நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாதவையாகின. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரே இரவில் ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை தடை செய்த மத்திய அரசின்
முடிவால், புழக்கத்தில் இருந்த ரூ.10 லட்சம் கோடி அழிக்கப்பட்டன. இந்த
நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டன.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளப்பட்ட முடிவு அல்ல என்றும், பணத்திற்காக வரிசையில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தியதாகவும் மனுக்களில் கூறப்பட்டது.
இதற்கு மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், ”பணமதிப்பழிப்பு நடவடிக்கை நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு. போலி ரூபாய் நோட்டுகள், பயங்கரவாதத்துக்கு நிதி செல்வது, கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை” என வாதிட்டது.
அதேபோல ”பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு நல்ல பலன்கள் இருந்ததாகவும் இதனால் பணமதிப்பழிப்பைத் தோல்வி எனக் கருத முடியாது.” என்றும் மத்திய அரசு கூறியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்திருந்தன. கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. மேலும் 2016ல் அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பழிப்பு கொள்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பின்னணியில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 4 -1 என்ற கணக்கில் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையை செல்லும் என்று ஜனவரி 2 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியுடன் 6 மாதமாக கலந்தாலோசித்த பிறகே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும் நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கை ’சட்டவிரோதமானது’ என்று தெரிவித்தார்.
தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காண்போம்.
“1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து 2016 நவம்பர் 8 அன்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். இந்த நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது என்பதால் மட்டுமே தவறு என்றாகிவிடாது.
மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியுடன் (ஆர்பிஐ) கலந்தாலோசித்து செயல்பட வேண்டும். அதன்படி பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் 6 மாதங்கள் ஆலோசனை நடத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் அவகாசம் வழங்கியது நியாயமற்றது அல்ல. அதை இப்போது நீட்டிக்கவும் முடியாது. 1978ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு நடவடிக்கை கொண்டு வந்த போது 3 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் அது 5 நாட்களாக நீட்டிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. .
”பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். இது பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என்பதால், திரும்பப் பெற முடியாது என்று நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
எனினும் நீதிபதி பி.வி. நாகரத்னா, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை “துன்பகரமானது மற்றும் சட்டவிரோதமானது” என்று உறுதியுடன் கூறினார்.
“ஆனால் தற்போதைய நிலையில் இப்போது மீட்டெடுக்க முடியாது. நாடாளுமன்றத்தின் சட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கையை நிறைவேற்றியிருக்கலாம். இந்த விவகாரத்தில் ரகசியம் தேவை என்று கருதியிருந்தால் அவசர சட்டம் நிறைவேற்றி இருக்கலாமே.
பணமதிப்பழிப்பு உத்தரவில் சட்டத்திற்கு முரணான மற்றும் சட்டவிரோதமான அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு நடவடிக்கையும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்பிஐ சட்டப்பிரிவு 26(2)ன் படி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கான முன்மொழிவு ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிடமிருந்து வெளிவர வேண்டும்” என்று குறிப்பிட்டார் நீதிபதி பி.வி. நாகரத்னா.
மேலும் அவர், நாடாளுமன்றத்தை இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நாடாளுமன்றம் இல்லாமல் ஜனநாயகம் தழைத்தோங்க முடியாது” என்று கூறினார்.
இதனையடுத்து பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துப்படி, ”பணமதிப்பழிப்பு நடவடிக்கை செல்லும்” என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி அப்துல் நசீர் நாளை (ஜனவரி 3) ஓய்வு பெற உள்ள நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக