ஞாயிறு, 15 ஜனவரி, 2023

அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவு... 28 காளைகளை அடக்கிய விஜய் என்பவருக்கு முதல் பரிசு!!

 tamil.asianetnews.com  -Narendran S :  மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவடைந்த நிலையில் 28 காளைகளை அடக்கிய விஜய் என்பவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் 737 காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலாவதாக கோயில் காளை இறக்கிவிடப்பட்டது. பல்வேறு சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் 28 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து முதல்பரிசை வென்ற விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல் பிடிபடாத காளைகள் சிறந்த காளைகளாக அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சிறந்த காளையாக முதலிடம் வந்த காத்தனேந்தல் காமேஷ், இரண்டாமிடம் வில்லாபுரம் கார்த்தி, மூன்றாமிடம் அவனியாபுரம் முருகன் ஆகியோரின் காளைகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து அதன் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முதல் பரிசை வென்ற விஜய், வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாகக் காரில் ஏறி அமரப்போகிறேன், முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக