வெள்ளி, 30 டிசம்பர், 2022

சந்தேக வளையத்தில் இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா? veerakesari

வீரகேசரி : அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் 37 அரசியல்வாதிகள் தாக்கல் செய்த ரிட் மனுவொன்று வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பது, ஆளும்கட்சியின் அரசியல்வாதிகள். பிரதிவாதிகளாக கூறப்பட்டிருப்பவர்கள், பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்ட அதிகாரிகள்.
காலிமுகத்திடலில் ‘கோ ஹோம் கோட்டா’ போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மே 9ஆம் திகதி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அலரி மாளிகையில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட ஆளும்கட்சியின் குண்டர்கள், போராட்டக்காரர்களின் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வன்முறைகள் இடம்பெற்றன.  அதன்போது, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அந்தச் சந்தர்ப்பத்தில் வீடுகளை இழந்த 37 பேரே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

மே 9ஆம் திகதி, சொத்துக்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவை, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அல்லது வேறு எவரேனும் பிரதிவாதிகள், வேண்டுமென்றே மீறினார்களா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரியே இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டம் இருந்ததா அல்லது வேறு நிகழ்ச்சி நிரல் இருந்ததா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த வழக்கில், முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் விக்கும் லியனகே, மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, உள்ளிட்ட இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாகவே விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டிருக்கிறது.

குறிப்பாக ஜெனரல் சவேந்திர சில்வாவை ஆளும்கட்சி அரசியல்வாதிகள் இலக்கு வைக்கின்றனர் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.

கோட்டா கஜபா ரெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியன் கட்டளை அதிகாரியாக இருந்த காலத்தில், ஜெனரல் சவேந்திர சில்வா அந்தப் படைப்பிரிவில், 2ஆம் லெப்டின்ன்ட் தர அதிகாரியாக இணைந்தவர்.

அந்தக் காலகட்டத்தில் இருந்தே இருவருக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையின் போது வல்வெட்டித்துறைப் பகுதியில் சவேந்திர சில்வா புலிகளின் தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.

கமல் குணரத்ன
அவரை பாதுகாப்பாக மீட்டு, உரிய மருத்துவ வசதிகளை விரைவாக ஏற்படுத்திக் கொடுத்து அவரைக் காப்பாற்றியவர் கோட்டா.

அதற்குப் பின்னர் இரண்டு பேரும், 1991 வரை பல்வேறு களமுனைகளில் இணைந்து பணியாற்றியிருந்தனர். கோட்டா பாதுகாப்புச் செயலாளர் ஆனதும், மீண்டும் சவேந்திர சில்வா அவருக்கு நெருக்கமானார்.

இறுதிக்கட்டப் போரில், கொழும்பில் இருந்த கோட்டாவுக்கும், களமுனையில் இருந்த சவேந்திர சில்வாவுக்கும் இடையில், இராணுவத்  தளபதியைத் தாண்டி நேரடியான தொடர்பு இருவருக்கும் இடையில் இருந்தது.

இந்த தொடர்பை, ஜெனரல் கமல் குணரத்னவின் நந்திக்கடலுக்கான பாதை நூலும் உறுதி செய்தது.

இறுதிக்கட்டப் போரில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளை கொன்று விடுமாறு சவேந்திர சில்வாவுக்கு கோட்டா உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

இதுபற்றி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், சூசகமான முறையில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், கோட்டா ஜனாதிபதியாகியதும், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார்.

கொரோனா ஒழிப்பு செயலணி தொடக்கம், கோட்டா உருவாக்கிய பல்வேறு செயலணிகளுக்கும் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கினார் அல்லது, அதில் இடம்பெற்றார்.

2020இல் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க பயணத் தடைகளை விதித்த பின்னர், அவருக்கு கோட்டா அரசாங்கம் இன்னும் கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கியது. இது அரசியலில் இராணுவத் தலையீடு அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டை உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் கொண்டு சென்றது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இராணுவமயமாக்கல் என்பது முக்கியமான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த வருட முற்பகுதியில் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கான முக்கியத்துவம் குறைந்தது.

அப்போதே, ஜனாதிபதி கோட்டாவுக்கும் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தான், மக்கள் போராட்டத்தின் போது, ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுகள் சரியாகப் பின்பற்றப்படவில்லையா- என்பதை விசாரிக்க கோரி, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மே 9 வன்முறைகள் காலி முகத்திடலில் தொடங்கிய போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆயினும், அந்தச் சம்பவங்களின் பின்னர், அவர் வன்முறைகளை தடுப்பதில் முப்படைகள், புலனாய்வுச் சேவைகளின் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தனவா என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட தலைமையிலான மூன்று முன்னாள் படைத்தளபதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு திருப்தி இல்லாத நிலையில் தான் அந்த நியமனத்தைச் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளன. இப்போது கோரப்படுகின்ற விசாரணையும், அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

அவ்வாறாயின் ஜனாதிபதி- பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுகள் உயர்மட்டப் படை அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டதா?

அவ்வாறு புறக்கணிக்கப்பட்டது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இதுதொடர்பாக ஆளும்கட்சியினர் ஏன் விசாரணைகளை கோர வேண்டும்? இதற்குப் பின்னால் உயர்மட்ட சந்தேகங்கள் பல இருக்கின்றன.

ஜெனரல் சவேந்திர சில்வாவின் செயற்பாடுகளின் மீது அவர்கள் சந்தேகம்  கொண்டுள்ளதாகவே தெரிகிறது.

மே 9ஆம் திகதி போராட்டக்காரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக ஐந்து பேர் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில், அந்த வழக்கில் முன்னர், பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவை, பிரதிவாதிகளின் பட்டியலில் இருந்து மனுதாரர்கள் நீக்கியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சனத் நிசாந்த, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டவர்களுடன், ஜெனரல் சவேந்திர சில்வாவும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தார். ஆனால் திடீரென பிரதிவாதியாக குறிப்பிட விரும்பவில்லை என்று மனுதாரர்கள் பின்வாங்கியிருக்கிறார்கள்.

இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை மனுதாரர்கள் விபரிக்கவில்லை. திடீரென எப்படி, ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு நல்லவரானார் என்றும் தெரியவில்லை.

ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் ஆளும்கட்சியினருக்கும், இடையில் உருவாகியிருக்கும் இடைவெளியை பிற தரப்புகள் பயன்படுத்த முனைவதாகவும் தெரிகிறது.

ஜெனரல் சவேந்திர சில்வாவின் மைத்துனர் கின்ஸ் நெல்சன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், ஜெனரல் சவேந்திர சில்வாவை ஆளும் தரப்பு பகைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இறுதிப் போர்க்கால இரகசியங்களை அறிந்தவர்களில் அவரும் ஒருவர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக