வியாழன், 1 டிசம்பர், 2022

கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை தகராறு - கன்னட கொடியால் மாணவன் மீது தாக்குதல் .. பரவும் வீடியோ.

 tamil.oneindia.com  -  Nantha Kumar R  :  கன்னட - மகாராஷ்டிரா இடையே எல்லை பிரச்சனை மீண்டும் வெடித்துள்ள நிலையில் இருமாநில முதலமைச்சர்களும் மோதிக்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் பிரச்சனைக்கு காரணமாக உள்ள பெலகாவில் கன்னட கொடி வைத்திருந்த கல்லூரி மாணவரை, சில மாணவர்கள் தாக்கிய நிலையில் இருமாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிற மக்கள் பேசும் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்ட பல மாநிலங்களில் இன்றும் கூட இருமாநிலங்கள் இடையே எல்லை பிரச்சனை என்பது உள்ளது.
இந்த பிரச்சனையை தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகா சந்தித்து வருகிறது. அதாவது கர்நாடகாவுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் இடையே தான் எல்லை பிரச்சனை உள்ளது.
எல்லை பிரச்சனை


இந்த பிரச்சனைக்கு காரணம் எது என்று கேட்டால் அது கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம் தான். இந்த மாவட்டத்தில் உள்ள கானாப்புரா உள்பட சில இடங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். இந்த மாவட்டம் தற்போது கர்நாடகாவுடன் உள்ளது. ஆனால் இந்த மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மகாராஷ்டிராவுக்கு சொந்தம் எனவும், அதனை மகராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசு கூறி வருகிறது. இதற்கு கர்நாடகா பதிலடி கொடுத்து வருகிறது. அதாவது கர்நாடகாவில் இருந்து ஒரு அங்குலம் இடத்தை கூட விட்டு தர முடியாது என கூறி வருகிறது.

மீண்டும் பிரச்சனை
கர்நாடகா- மகாராஷ்டிரா இடையேயான இந்த எல்லை பிரச்சனை என்பது கடந்த 1960ல் இருந்து தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் கூட அவ்வப்போது இருமாநிலங்கள் இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் தலைத்தூக்கும். அப்போது இருமாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துகள் தடை செய்யப்படும். மேலும் எல்லை பிரச்சனை தொடர்பாக இருமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தப்படும். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் கர்நாடகா-மகராஷ்டிரா எல்லை பிரச்சனை சூடுபிடித்துள்ளது.

பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்
எல்லை பிரச்சனை தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, மகராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இடையே வார்த்தை மோதல்கள் வெடித்துள்ளன. இருமாநிலங்கள் இடையே நிலைமை இப்படி இருக்க எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. அது என்ன என்பது பற்றிய விபரம் வருமாறு:

மாணவர் மீது தாக்குதல்
கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே எல்லை பிரச்சனைகள் உள்ளன. இந்நிலையில் தான் பெலகாவியில் உள்ள தனியார் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. இந்த வேளையில் கல்லூரி மாணவர் ஒருவர் கர்நாடகாவின் கன்னட கொடியான சிவப்பு மஞ்சள் நிறம் கொண்ட கொடியை அசைத்தார். இதை பார்த்த சிலர் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கன்னட அமைப்பினர் போராட்டம்
இந்நிலையில் தான் கர்நாடகாவின் கொடியை காண்பித்த மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் கன்னட அமைப்பினர் வீதிகளில் இறங்கி இன்று போராட்டம் நடத்தினர். இதனால் கர்நாடகா-மகாராஷ்டிரா இடையேயான எல்லை பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

English summary
As the border dispute between Karnataka and Maharashtra has flared up again, the Chief Ministers of the two states are clashing. Meanwhile, some students attacked a college student who was holding a Kannada flag in Belaga, which is the cause of the problem, which has created tension between the two states.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக