வியாழன், 1 டிசம்பர், 2022

தமிழகத்தில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் காலியாக உள்ளன- மத்திய அரசின் கொள்கைகளால் சிக்கல்

maalaimalar.com :   சென்னை தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
ஆனாலும் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 7,378 உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீதம் போல மீதமுள்ள இடங்கள் தமிழக அரசின் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறையை பின்பற்றி தான் அனைத்து மாநிலங்களிலும் கலந்தாய்வு நடத்தப்படுகின்றன.
தமிழகத்திலும் அதன்படி கலந்தாய்வு நடந்து வருகிறது. 2-வது கட்ட கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள். அதன் பின்னர் ஏற்படும் காலி இடங்களும் அடுத்த கட்டமாக நிரப்பப்படும்.
இந்த நிலையில் மத்திய அரசின் தவறான கொள்கையால் நாடு முழுவதும் 5,931 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. 4,299 எம்.பி.பி.எஸ். இடங்களும் 1,280 பி.டி.எஸ். இடங்களும் 352 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும் காலியாக கிடக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 345, நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 318, என்.ஆர்.ஐ. 201, எய்ம்ஸ் மதுரை 24, இ.எஸ்.ஐ.சி-4 காலியாக உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி, மதுரை மருத்துவக்கல்லூரி போன்ற சிறப்பு வாய்ந்த கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்கள் அடுத்ததாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறான விதிமுறைகளால் 2021-ல் ஏற்பட்ட 24 காலி இடங்கள் மீண்டும் காலி இடமாக உள்ளது.

இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்ட பின்னர் நடந்த முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு 600 இடங்கள் காலியாக இருந்தன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்து அதனை தாமதமாக சரண்டர் செய்வதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒதுக்கப்படுகின்ற இடங்கள் கடைசி வரை நிரம்பாமலேயே போய்விடுகின்றன.

இதனால் அந்த இடங்களில் சேர்த்து படிக்க தகுதி பெறும் மாணவர்களுக்கு கிடைக்காமல் வாய்ப்பு பறி போகிறது. இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மாற்றி அமைத்தால் தான் மருத்துவ இடங்கள் காலியாகாமல் போவதை தடுக்க முடியும்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடைசி நேரத்தில் மருத்துவ இடம் கிடைக்காமல் வாய்ப்பு இழக்கின்றனர். அவர்களுக்கு இந்த காலி இடங்களை ஒதுக்கினால் பயன் அடைவார்கள் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக