மின்னம்பலம் - Prakash : இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்: ராகுல் காந்தி
”இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கி (செப்டம்பர் 7), பல மாநிலங்களிலும் அதை நிறைவு செய்து வருகிறார்.
தற்போது அவருடைய இந்த ஒற்றுமைப் பயணம் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பொதுக்கூட்டத்தில் இன்று பேசிய ராகுல்காந்தி, “ஆங்கில மொழியை பள்ளிகளில் கற்பிப்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவர்களின் பிள்ளைகள் ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளிகளுக்கு சென்று படிக்கின்றனர். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலம் கற்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.
மக்களை ஏழைகளாக வைத்திருக்கவே ஆங்கிலம் கற்பதை பாஜக தடுக்கிறது. நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி மற்றவர்களுடன் பேச வேண்டும் என்றால், இந்தி மொழி உங்களுக்கு உதவாது.
எனவே ஆங்கிலம் படியுங்கள். எங்களுக்கு, இங்கிருக்கும் ஏழைகளின் பிள்ளைகள் அமெரிக்கர்களுடன் போட்டி போட்டு, அவர்களின் மொழியிலேயே வெல்ல வேண்டும். ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்க வேண்டும். எனவே ஆங்கிலம் படித்து வேறு துறைகளுக்கு செல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, சமீபகாலமாக இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு எதிராக அம்மாநிலங்களில் (தமிழகம், கேரளா, தெலுங்கானா) எதிர்ப்பு கிளம்பியதும், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக