தேசம்நெட் - அருண்மொழி : தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியா – ஆசிக்குளம், மதுராநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கிராம மக்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி அரிசி மூடைகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மதுராநகர் கிராமத்தில் சுமார் 1000 கிலோவிற்கும் மேற்பட்ட அரிசி மூடைகள் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த அரிசி மூடைகள் பழுதடைந்து புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நாகலிங்கம் கமலதாசன் நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவிக்கையில், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை குறித்த இடத்திற்கு அனுப்பி அறிக்கையிடுமாறு தெரிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக