சனி, 17 டிசம்பர், 2022

இலங்கை கொழும்பு மயானத்தில் காருக்குள் சித்ரவதை- உயிரிழந்த ; தொழிலதிபர் தினேஷுக்கு நடந்தது என்ன

கொழும்பு – பொரள்ளை மயானத்தில் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், முன்னணி வர்த்தகருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
கொழும்பு – பிளவர் வீதியைச் சேர்ந்த 51 வயதான முன்னணி வர்த்தகரே தினேஷ் சாஃப்டர்.
உயிரிழந்த நபர், தனது காருக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொரள்ளை போலீஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நடந்தது என்ன?
கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து தினேஷ் சாஃப்டர் நேற்று (15) மாலை புறப்பட்டு சென்றுள்ளார்.

பல கோடி ரூபா கடனை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கடனை பெற்றுக்கொண்ட நபரை சந்திப்பதற்காக தான் செல்வதாக தனது மனைவியிடம் கூறி, தினேஷ் சாஃப்டர் புறப்பட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின்னர், தினேஷ் சாஃப்டரின் மனைவி, தினேஷ் சாஃப்டருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
எனினும், தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி செயலிழந்திருந்ததாக போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி ஜி.பி.எஸ் அலைவரிசையின் ஊடாக, அவரது தொலைபேசி சமிக்ஞையை தேடியுள்ளார்.
இதன்போது, தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி, இறுதியாக கொழும்பு – பொரள்ளை மயான வளாகத்தை காண்பித்துள்ளது.
மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, கணவருடன் பணியாற்றும் மற்றுமொரு நிறைவேற்று பணிப்பாளர் ஒருவருக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த அதிகாரி, பொரள்ளை மயானத்தை நோக்கி சென்றுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
பொரள்ளை மயானத்தில் தினேஷ் சாஃப்டரின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அதிகாரி காரை நோக்கி சென்று தேடியுள்ளார்.
தனது காரின் சாரதி ஆசனத்தில் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில், கழுத்து வையர் ஒன்றினால் நெரிக்கப்பட்டிருந்ததை, குறித்த அதிகாரி அவதானித்துள்ளார்.

இதையடுத்து, மயானத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டரை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் குறித்த அதிகாரி அனுமதித்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷ் சாஃப்டரின் காருக்கு அருகிலிருந்து, சந்தேகத்திற்கிடமான மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளதை, மயானத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர் அவதானித்துள்ளமை போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தன்னிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தினேஷ் சாஃப்டர் பல முறைப்பாடுகளை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

விசாரணையின் முன்னேற்றம்
இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக