சனி, 3 டிசம்பர், 2022

ஷாக் கொடுத்த குஜராத் மக்கள்: வாக்குப்பதிவு குறைவுக்கு என்ன காரணம்?

 minnambalam.com  - Kavi  :   27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸும், பஞ்சாப்பை கைப்பற்றியது போல் குஜராத்தை கைப்பற்ற ஆம் ஆத்மியும் போட்டியிட்டுள்ளன.
விறுவிறுப்பாக நடந்த தேர்தல் பிரச்சாரம் முடிந்து நேற்று (டிசம்பர் 1) தெற்கு பகுதியில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே மந்தமான நிலையே நீடித்தது. தேர்தல் ஆணையம் காலை 9, 11,1,3, 5 மணி நிலவரங்களை அறிவித்துக் கொண்டே இருந்தது.
இதில், 3 மணி வரை 48 சதவிகித வாக்குகளே பதிவாகியிருந்தன. இது அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், 2012 தேர்தல் போல் இறுதி நேரத்தில் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று காத்திருந்தனர்.


அதாவது 2012ல் நடந்த முதல்கட்ட தேர்தலில் மதியம் ஒரு மணி வரை 38 சதவிகித வாக்குகள் தான் பதிவாகியிருந்தன. மந்தமான நிலையே இருந்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கை மாலை 5 மணியளவில் அதிகரித்து 70.75 சதவிகிதத்துடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த தேர்தலிலும் இறுதி கட்டத்தில் வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு 63.14 சதவிகித வாக்குகளுடன் ஏமாற்றத்தில் முடிவடைந்தது.

2012ல் 70.75 சதவிகித வாக்குகள் முதல்கட்ட தேர்தலில் பதிவான நிலையில், இந்த விகிதம் 2017ல் 4 சதவிகிதம் குறைந்து 66.75சதவிகித வாக்குகள் பதிவாகின.

தற்போது 2017ஐ காட்டிலும், மக்களைவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்பட்ட 2022 குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது. 2022 தேர்தலில் 63.14 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், 3.61 சதவிகிதம் குறைவு ஆகும்.

நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 78.24% வாக்குகள் பதிவாகியுள்ளன, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான தாபியில் 76.91% வாக்குகள் பதிவாகி இரண்டாவது இடத்தில் உள்ளது.

நிசார் (77.87%), ஜகாடியா (77.65%) மற்றும் கப்ரதா (75.17%) போன்ற பழங்குடியின தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு குறைந்தது பற்றி, மாநில பாஜக பொதுச் செயலாளர் வினோத் சாதவ், “இது இயற்கையானது” என்று தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், பழங்குடியினர் மக்களுக்குக்காக பாஜக அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இதனால் பழங்குடியினர் அதிகளவு வாக்களித்திருப்பது தங்களுக்கு சதாகமானது தான் என பாஜகவினர் கூறுகின்றனர். சூரத் தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாஜகவுக்குத்தான் வாக்களித்திருப்பார்கள், இதனால் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரிக்கும் என சூரத் நகர பாஜக தலைவர் நிரஞ்சன் ஜான்ஜ்மர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாநில தலைவர் பரேஷ் தனானி கூறுகையில், “பாஜக மீதான மக்கள் கோபம் அதிகரித்துவிட்டது. அதை தணிக்க பாஜக எதுவும் செய்யவில்லை. குஜராத்துக்காக எதுவும் சிறப்பாக செய்யவில்லை. இதனால் பாஜக ஆதரவாளர்கள் சிலரே வாக்களிக்க செல்லவில்லை. அதே நேரத்தில் பாஜக மீது கோபமாக இருப்பவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து காங்கிரஸுக்கு வாக்களித்தனர்” என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியும் ஆளும் கட்சி மீதான அதிருப்தியே வாக்குப்பதிவு குறைவுக்கு காரணம் என கூறியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாற்றம்…. குஜராத் மக்களே நீங்கள் சிறப்பான பணியை செய்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர 6 கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்திருப்பதும் வாக்கு எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஜாம்நகர் மாவட்டத்தில் த்ராஃபா, நர்மதா மாவட்டத்தில் சமோட் மற்றும் பருச் மாவட்டத்தில் கேசர் என 6 கிராமங்கள் தேர்தலை புறக்கணித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வாக்குச் சாவடிகள், கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாதது, விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணாதது ஆகிய காரணங்களால் இந்த 6 கிராமங்களும் தேர்தலை புறக்கணித்துள்ளன.

இதுதவிர நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 50 சதவிகித மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி முதல்கட்ட தேர்தலுக்காக அகமதாபாத் மற்றும் சூரத்தில் 30 பேரணிகள் மற்றும் பெரிய சாலை பேரணிகள் என சூறாவளி பிரச்சாரம் செய்தார். இருந்தும் மக்கள் வாக்கு எண்ணிக்கை குறைந்திருப்பது ஆளும் கட்சி மீதான அதிருப்தியையே வெளிப்படுத்துகிறது என அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி குஜராத்தின் வடக்கு பகுதியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சௌராஷ்டிரா உள்ளிட்ட 93 தொகுதிகள் கொண்ட குஜராத்தின் வடக்கு பகுதி காங்கிரஸ் பலம் வாய்ந்தது. வடக்கு பகுதியில் தான் கடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேர்தலில் வெற்றி பெறவும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக