திங்கள், 7 நவம்பர், 2022

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மர்ம மரணம்; கரூரில் உறவினர்கள் போராட்டம்

nn

நக்கீரன்  : கரூரில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி செலுத்திக்கொண்ட பெண் உயிரிழந்ததால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கல்லுமடையை அடுத்துள்ளது மருதம்பட்டி. அந்தப் பகுதியில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர் முகேஷ் குமார்.


இவரது மனைவி ஜோதி. முகேஷ்குமார்- ஜோதி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள தம்பதியினர் முடிவு செய்தனர்.
அதற்காக நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஜோதியும் முகேஷ் குமாரும் உப்பிடமங்கலத்தில் இருக்கக்கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி கருத்தடை அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஜோதிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஜோதி அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு  அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்நிலையில் ஜோதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் முறைப்படி விசாரிக்க வேண்டும் என்றும் ஜோதியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக