திங்கள், 7 நவம்பர், 2022

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

tamil.oneindia.com  -  Mathivanan Maran  :  டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் 4 தனி தனி தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 5ல் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் ஆகியோர் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
1980களின் இறுதியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இதனாலேயே அப்போதைய பிரதமர் மறைந்த வி.பி.சிங், சமூக நீதி காவலராக இன்றும் கொண்டாடப்படுகிறார்.
ஆனால் இடஒதுக்கீடு வந்துவிட்டால் தாங்கள் ஏகபோகமாக அனுபவித்து வரும் இடங்கள் பறிபோகும் என பதறியது முற்படுத்தப்பட்டோர் பிரிவு. இதனால் மண்டல் கமிஷனின் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு எதிராக வட இந்தியாவை பற்றி எரிய வைத்தனர். தீக்குளிப்பு சம்பவங்களும் நடந்தன. அப்போது இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் இருந்தது பாஜக.

10% இடஒதுக்கீடு
பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போதும் இடஒதுக்கீட்டை எதிர்க்கக் கூடியது. இந்துத்துவ கோட்பாடானது வர்ண அடிப்படையில் குலத்தொழிலை வலியுத்தக் கூடியது. அதை நிர்மூலமாக்கக் கூடியது இடஒதுக்கீடு. ஆகையால் பாஜக கடுமையான எதிர்ப்பு நிலையில்தான் இருக்கிறது. அதே பாஜகதான் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தமது வாக்கு வங்கியான முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி இருக்கிறது. அதாவது முற்படுத்தப்பட்ட வகுப்பில் (சோ கால்ட் உயர்ஜாதி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குகிறது மத்திய அரசு.

10% இடஒதுக்கீட்டால் குழப்பம்
உச்சநீதிமன்றமானது ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் இடஒதுக்கீடு அளவு என்பது 50%-க்கு அதிகமாக செல்லக் கூடாது என தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசனப் பாதுகாப்பு உண்டு. ஆகையால் உச்சநீதிமன்ற தீர்ப்பு, நம்மை கட்டுப்படுத்தாது. ஆனால் மத்திய அரசு வழங்கிய 10% உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு பல மாநிலங்களில் 50% இடஒதுக்கீட்டு அளவை அப்பட்டமாக மீறக் கூடியதாகிவிட்டது.

திமுக எம்.பி. வில்சனின் செம்ம வாதம்
ஆகையால் உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. திமுகவும் இந்த வழக்கில் இணைந்துள்ளது. திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வில்சன் எம்.பி, முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது அசாதாரண சூழலில் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறது மத்திய அரசு. இதை எப்படி ஏற்க முடியும்? வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. ஒரு வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது எப்படி அசாதரணமான சூழலாகும்? வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை கணக்கில் கொள்ளாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது. 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட வகுப்பாக எப்படி வகைப்படுத்த முடியும்? இதனை இந்திரா சஹானி தீர்ப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டதும் கிடையாது. இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாடு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்னமும் முழுமையாக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவே இல்லை. அவர்களுக்கு மத்திய அரசு பணிகள் கிடைப்பதும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் சமூகங்களை அரசியல் சாசனம் உருவாகிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் முன்னேறிய வகுப்பினரில் 31.2% பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக மத்திய அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதம் ஏற்கக் கூடியது அல்ல என ஆணித்தரமாக வாதிட்டிருந்தார். 

இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்விலுள்ள நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்புகளை வாசித்தனர். இது லைவாக ஒளிபரப்பப்பட்டது. இதனிடையே 5ல் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கினர். 

நீதிபதி எஸ் ரவீந்திர பாட் மற்றும் தலைமை நீதிபதி லலித் ஆகியோர் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர். எனவே உச்சநீதிமன்றம், இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுள்ளது. இதனால் மத்திய அரசு தரப்பு வென்றுவிட்டது. இதனிடையே தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக