புதன், 2 நவம்பர், 2022

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கல்-கொலுசு திருகாணியை வைத்து தையல்: உறவினர்கள் அதிர்ச்சி

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கல்-கொலுசு திருகாணியை வைத்து தையல்: உறவினர்கள் அதிர்ச்சி

மாலைமலர் :மெலட்டூர்  தஞ்சை மாவட்டம், பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மனைவி ராதிகா (வயது 30). இவர் பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மொபட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் கண் புருவம். மற்றும் கை, காலில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கண் புருவம் மற்றும் கால் பகுதியில் தையல் போடப்பட்டு முதல் உதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ராதிகாவுக்கு தையல் போடப்பட்ட பகுதிகள் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது கண் புருவத்தில் சிறிய அளவிலான கல் ஒன்றும். கால் பகுதியில் கொலுசு திருகாணி மற்றும் முத்து ஒன்றையும் வைத்து தையல் போட்டிருப்பது தெரியவந்தது கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கல் மற்றும் கொலுசு திருகானி, முத்து ஆகியவற்றை அகற்றிவிட்டு மீண்டும் தையல் போட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ராதிகா குடும்பத்தினர் கூறியதாவது,

பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்த போதிலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் இதுபோன்று அலட்சியத்துடன் கவனகுறைவுடன் சிகிச்சை அளிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்யவேண்டும். முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட லாயக்கற்ற நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் செயல்படுவது வேதனை அளிக்கும் செயலாகும். அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மீது மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக