வெள்ளி, 11 நவம்பர், 2022

ராஜீவ் கொலை - நளினி உட்பட 6 பேர் விடுதலை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு

BBC Tamil :BBC ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் கடந்த மே 18-ம் தேதி விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுச் செய்திருந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் இந்த தீர்ப்பினால், விடுதலை பெற இருக்கிறார்கள்.
ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளன் கடந்த மே மாதம் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டாரோ அதே அடிப்படையிலேயே மீதமுள்ள இந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேறு எந்த வழக்கிலாவது இவர்கள் சிறையில் இருப்பது தேவை இருந்தால் ஒழிய இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நளினி, ரவிச்சந்திரன் சிறை நடத்தையில் திருப்தி

மனு தாரர்களான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் நன்னடத்தையை வெளிப்படுத்தியிருப்பதையும், இவர்கள் மிக நீண்ட காலம் சிறையில் இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“நளினி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது நடத்தை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. கணினி பயன்பாட்டில் அவர் பிஜி டிப்ளமா முடித்துள்ளார்.
ரவிச்சந்திரனின் சிறை நடத்தையும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. சிறையில் அவர் பி.ஜி. டிப்ளமா உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைத் தொடர்ந்தார்.

பல்வேறு அறப் பணிகளுக்கு அவர் நிதி திரட்டியுள்ளார்,” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

ராஜீவ் கொலை
பேரறிவாளன் வழக்கை அடிப்படையாக கொண்டு தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி இந்த இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

கடந்த மே மாதம் அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில், 2018ம் ஆண்டு இவர்களை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் 6 பேர் சிறையில் இருந்துவந்தனர்.
நான்கு இலங்கை நாட்டவர்

தற்போது விடுதலையாகும் 6 பேரில், நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சாந்தன் இலங்கைக் கடவுச் சீட்டின் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் கடவுச் சீட்டு உண்டு. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்துகொண்டவர்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு இலங்கைக்கு திரும்பிச் செல்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

காங்கிரஸ் எதிர்ப்பு
“மீதம் சிறையில் இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்க முடியாததும், முழுவதும் தவறானதும் ஆகும்.

காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்தியாவின் ஆன்மாவுக்கு இசைவாக செயல்படாதது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக