ஞாயிறு, 30 அக்டோபர், 2022

பிரிட்டன் இனவெறியர்களின் பொம்மை சூயல்லா பிராவர்மன் (Suella Braverma) இந்திய வம்சாவளி அமைச்சர்

May be an image of 1 person

Arun Bala  :  பாகிஸ்தானில் பிறந்து, கென்யாவில் வாழ்ந்த பெற்றோர்களுக்கு இங்கிலாந்தில் பிறந்து,
வளர்ந்து, கடந்த வாரம் பிரதமராகியுள்ள ரிஷி சுனாக்கை இந்தியராக்கிக் கொண்டாடிய இந்திய ஊடகங்கள்,
அதே சுனாக் தலைமையிலான அரசில், சக்திவாய்ந்த முக்கிய அமைச்சராக ஆகியுள்ள, ஒரு இந்திய அதிலும் தமிழ் வம்சாவளிப் பெண் பற்றி இலேசாக  முனுமுனுக்கக் கூட இல்லை.
ஆனால் அவர் தான் கடந்த சில நாட்களாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதங்களிலும் ஊடகங்களிலும் முக்கிய பேசு பொருளாக இருக்கிறார்.
சூயல்லா பிராவர்மன் (Suella Braverman) என்கிற பெயர்,
மேற்கத்திய பெயர் போல இருந்தாலும் அவர் மொரீசியத் தமிழ்த் தாய்க்கும்,
கோவாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர்.


முதலில் போரிஸ் ஜான்சன் அரசில் அட்டார்னி ஜென்ரலாக இருந்தார்.
பின் 45 நாள் மட்டுமே நீடித்த லிஸ் டிரஸ் அரசிலும், தற்போது சுனாக் அரசிலும் உள்துறை அமைச்சராக இருக்கிறார்..
இந்த சூயல்லா, எப்படிப் பட்டவர் என்றால் வலதுசாரி பழமைவாத கட்சியிலேயே, அதி தீவிர வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்தவர்.
பாராளுமன்றத்தில் இடதுசாரிகளைப் பற்றி சிறுபிள்ளைத்தனமான அவதூறுகளை, வசைகளை கூசாமல் வைப்பவர்.

ருவாண்டா போன்ற இனச் சுத்திகரிப்புப் போர் நடக்கும் நாடுகளில் இருந்து,
உயிர்த் தப்பி, மொத்த உடைமைகளையும் ஒரே ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு,
தஞ்சம் கேட்டு வரும் ஏதிலிகளைப் பிடித்து,
அவர்கள் நாட்டுக்கு, அதாவது கொலைக்களத்திற்கு, வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவது தன் இலட்சியக் கனவு என்றும் சொல்லும் அளவிற்குக் கொடூரமானவர்.

அவரின் கொள்கைகளாலேயே ஏதிலிகள் முகாமில் கொள்ளை நோய்கள் பரவியது என்று அதிகாரிகள் சொல்லும் அளவிற்கு மிக 'நல்லவர்'.
இந்தியர்கள் தான் பிரிட்டனில் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களில் முதன்மையாவர்கள்;
அவர்களின் விசா நடைமுறைகளைக் கடுமையாக்குவேன்  என்று இவர் சொல்ல, அதனால் கோவப்பட்ட இந்தியா ஜியின் பிரிட்டன் பயணத்தையே தள்ளி வைத்தது தனிக் கதை.
ஆக மொத்தத்தில் பதவியிலும் சரி, சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியலிலும் சரி, பிரித்தானிய அமித்ஷா தான் சூயல்லா.

போயும் போயும் அந்த சூயல்லாவுக்கு ஏன் பதவி கொடுத்தீர்கள்?
எனும் கேள்வி தான் கடந்த மூன்று நாட்களாகச் சுனாக்கைத் துரத்துகிறது.
 எதிர்க்கட்சிகள் மட்டும் அல்ல ஆளுங்கட்சி ஆதரவாளர்களே அந்த கேள்வியை எழுப்புகிறார்கள்.
அதற்குக், காரணம், சுனாக் பிரதமரானதற்கு முந்தைய வாரம் தான்,
அரசு ரகசிய ஆவணங்களை, விதிப்படி அரசு ஈமெயிலில் அனுப்பாமல் தன் தனிப்பட்ட ஈமெயிலில் அனுப்பி, மாட்டிக் கொண்டு, தன் பதவியை ராஜினாமா செய்தவர் சூயல்லா. ஒரே வாரத்தில்,
அவரையே மீண்டும் உள்துறை அமைச்சராக சுனாக் நியமித்தது மிகப்பெரிய தவறு எனும் கருத்து உரத்து ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

ரகசிய ஆவணங்களைத் தனிப்பட்ட ஈமெயிலில் அனுப்புவது கட்டாயம் தவறு தான் என்றாலும் கூட, அது பதவியையே பறிக்கும் அளவிற்கு,
மறுபடி அவருக்குப் பதவியே கொடுக்கக் கூடாது எனும் அளவிற்கு மிகப்பெரிய குற்றம் அல்ல. ஆனாலும் ஏற்கனவே தாங்கள் தேர்ந்தெடுக்காத வெள்ளையரல்லாதவர் ஒருவர் இங்கிலாந்து பிரமரானதை ஜீரணிக்க முடியாத பழமைவாத கட்சி ஆதரவாளர்கள் (பெரும்பாலும் வெள்ளையர்கள்),
இன்னொரு பழுப்பு நிறத்தவர் உயர்ந்த பதவியில் இருப்பது பொறுக்க முடியாமல்,
இந்த ஈமெயில் விவகாரத்தைச் சாக்காக வைத்து, அவரைப் பதவியறக்கப் பார்க்கிறார்கள்.

 தன் கட்சியின் தீவிர வலதுசாரிப் பிரிவைச் சரிக்கட்டுவதற்காகவே சூயல்லாவை அமைச்சராக்கிய சுனாக், தன் கட்சி ஆதரவாளர்கள் தரும் அழுத்தத்தில் அவர் பதவியை விரைவில் பறிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இதைப் புரிந்து கொள்ள, பழமைவாத வெள்ளையர்கள் கட்சியில், மாநிறம் கொண்ட (ரிஷியைப் போல பில்லியனராக இல்லாத) சூயல்லா எப்படி உயர்ந்தார் என்று பார்க்க வேண்டும

சூயல்லா உண்மையிலேயே அப்படிப்பட்டவரோ இல்லையோ, ஆனால் இனவெறி வெள்ளையர்களை விடத் தன்னை அதி தீவிர வலதுசாரியாகக் காட்டிக் கொண்டதன் மூலமே அரசியலில் வளர்ந்தார்
அவர். அதே போல் வலதுசாரி வெள்ளையர்களும், தாங்கள் வெளிப்படையாகச் சொல்ல, செய்யத் தயங்கும் இனவெறி விசயங்களைச், சொல், செயல்படுத்துவதற்காகவே சிறுபாண்மையினரில், குடியேறியவர்களில் ஒருவரைத் தங்கள் முகமூடியாக முன்னிறுத்தும் வழக்கப்படி சூயெல்லாவை வளர்த்தார்கள்.

இது இருதரப்புக்கும் வசதியான, ஆதாயம் தரும் ஏற்பாடு. ப்ரீதி படேல் என்கிற மிகக் கொடூரமான,
முந்தைய  பிரித்தானிய உள்துறை அமைச்சர், அமெரிக்காவின் டிவி 'மாரிதாஸ்' தினேஷ் டிசெளசா என்று மேற்கத்திய நாடுகளின் வலதுசாரி அரசியலில், பல இன, மத, மொழிச் சிறுபாண்மையினரின் வளர்ச்சி இப்படி ஏற்பட்டதுதான்.

ஆனாலும் என்ன, இப்படி இனவாதி, மதவாதிகளின் கூட்டத்தில் சேர்ந்து, தீவிர வலதுசாரியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு கிடுகிடுவென வளர்ந்தவர்களின், திடீர் வீழ்ச்சியும், அதே இனவாதி, மதவாதிகளாலேயே வருகிறது. காரியம் முடிந்ததும் கருணையே பார்க்காமல், தஙகளுக்கு 'அந்நியர்களை' போட்டுத் தள்ளுவதில் இன, மதவாதிகளுக்கு ஈடு இணை யாருமே இல்லை.

சூயெல்லாவும், ப்ரீதியும், திணேசும் அவர்களை வளர்த்த கூட்டத்தாலேயே வீழ்த்தப் பட்டார்கள்; படுவார்கள். ஊழல் பணத்தில், தலைக்கு ஐநூறு கோடி வரை கொடுத்து ஊரெல்லாம் நூற்றுக்கணக்கான எம்எல்ஏ, எம்பிக்களை வாங்கும் பாஜகவில் வெறும் பதினைந்தாயிரம் பணம் பெற்றுக் கொண்டதற்காகப் பதவியிழந்த ஒரே தலைவர் பங்காரு லெட்சுமணன் ஒரு தலித்தென்பது தற்செயல் அல்ல.

இதே கதி தான் சங்கிகளுக்கே சங்கியாகிக், குறுக்கு வழியில் வழியில் வளரத் துடிக்கும்  வேலூர் இப்ராகிம் போன்ற பாஜகவிலுள்ள இஸ்லாமியருக்கும், சங்கர மட, ஆர்எஸ்எஸ் பிஸ்கட்டுக்கு வாலாட்டும் பிற்படுத்தப்பட்டவருக்கும், ஆதி திராவிடருக்கும், பார்பனியத்துக்குப் பார்ப்பனரை விட பாய்ந்து பாய்ந்து முட்டுக் கொடுக்கும் நவ பார்ப்பனருக்கும் நடக்கும்!
சாதிவெறி, இனவெறி, மதவெறி சகவாசத்தில் வரும் வளர்ச்சி, அதே வெறியாலேயே வீழ்த்தப்படும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக