சனி, 29 அக்டோபர், 2022

1518 ஆம் ஆண்டில் கீழக்கரையும் காயலும் பின்னே கோரமண்டலமும்! .. முத்துக்குமார் சங்கரன்

No photo description available.

Muthukumar Sankaran Tuticorin  :  கீழக்கரையும் காயலும் பின்னே கோரமண்டலமும்
1518 ஆம் ஆண்டில் நம் பகுதி மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ளலாமா?
The Book of Duarte Barbosa Volume II
An account of the countries bordering on the Indian Ocean and there inhabitants written by draughtly Barbosa and completed about the year 1518 A.D.
என்கிற இந்த நூல் 1812 இல் போர்ச்சுகீசிய மொழியில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1921 இல் வெளியிடப்பட்டது. கல்கத்தா இம்பீரியல் நூலகத்தில் இருந்த இந்த நூல்  சிறிது சேதம் அடைந்த பிறகு டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது . Indianculture வலைத்தளத்தில் பொதுப் பார்வையில் இருக்கிறது.
மூல நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் பெயர்களையே நானும் குறிப்பிட்டுள்ளேன் புரிந்து கொள்ள வசதியாக அந்த ஊர்களை பற்றி மட்டும் அடைப்புக்குறிக்குள் தெரிவித்திருக்கிறேன். மற்றபடி அனைத்து வாசகங்களையும் அப்படியே நேரடியாக மொழிபெயர்த்து இருக்கிறேன்

சிலோன் தீவை விட்டுப்  புறப்பட்டு நிலப்பரப்பை நோக்கி வரும் பொழுது குமரிமுனை கடந்தால்  கீழக்கரை  Quilcare என்ற பெயரில் கொல்லம் Coulam  அரசருக்கு சொந்தமான ஒரு நிலப்பகுதி இருக்கிறது.


அந்தப் பகுதியில் நிறைய பெரிய நகரங்கள் அமைந்திருக்கின்றன.
இப்பகுதி  இனத்தவர்களுடனும் கடலோடிகளுடனும் சேர்ந்து  நிறைய மூர் இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் முன்பு  சம்பன் என்கிற படகுகளில் ஏறி இங்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள். கம்பயா Cambaya (குஜராத் டையூ ஆகிய காம்பே வளைகுடா பகுதி) பகுதி பொருட்களை அவர்கள் கொண்டு வருவார்கள்.
உயர்ந்த ஜாதி குதிரைகள் மீது  ஏற்றப்பட்டு அந்தப் பொருட்களும் துணி வகைகளும் மலபார் தேசம் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.
இங்குள்ள மாற்று மதத்தைச்  சேர்ந்தவர்களுக்கான  வழிபாட்டுத்  தலம் ஒன்றில் உள்ள உருவ சிலை இந்தப் பகுதி மக்களால் பெரிதும் மதித்து வணங்கப்படுகிறது.
அந்த வழிபடுமிடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய திருவிழா நடைபெறுகிறது. அந்த வழிபாட்டிலும் மதச் சடங்குகளிலும் ஈடுபடக்கூடிய அனைவரும் அன்று அங்கு வந்து இறை அருள் பெற  ஒன்று கூடுகிறார்கள்.

மிகப் பெரிய அளவில் வருமானம் வரக்கூடிய ஏராளமான நில புலன்கள் அந்த கோயிலுக்கு சொந்தமாக இருக்கின்றன. அவர்களுக்கு என்றே ஒரு தலைவனும் இருக்கின்றான்.  
அவனுடைய ஆட்சி 12 ஆண்டுகள் நடக்கும்.  12 ஆண்டுகளுக்கு மேல் அவன் உயிரோடு இருந்தாலும் அவன் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

அப்படி ஒருவன் ஆட்சி பொறுப்பேற்று பன்னிரண்டு ஆண்டுகள் முடியும்போது அந்த திருவிழா வரும். அந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடும் பிரம்மாண்டமான திருவிழா அது. பிராமணர்களுக்கு உணவளிப்பதற்காக ஏராளமான பணம் செலவிடப்படும். மிகப்பெரிய பீடம் ஒன்று அமைக்கப்பட்டு அதனைச் சுற்றிலும் பட்டுத்துணிகளும் தோரணங்களும் தொங்கவிடப்படும்

குறிப்பிட்ட நாளில் இசை ஒலி முழங்க மன்னன் குளத்துக்கு சென்று குளித்துவிட்டு சடங்குகளை எல்லாம் முடித்துவிட்டு வந்து அந்த சிலைக்கு வழிபாட்டு சடங்குகள் செய்வான். பிரார்த்தனை முடிந்ததும் அந்த மர பீடத்தின் மேல் ஏறுவான்
அங்கே அவனுக்காக மிக கூர்மையான கத்திகள் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
அவற்றை எடுத்து அவன்  தன்னுடைய மூக்கு, காதுகள், உதடு என்று எந்த உறுப்புகளை எல்லாம் தன் கைப்பட எவ்வளவு வேகமாக அறுக்க முடியுமோ அவ்வளவு வேகமாக அறுத்தெறிவான்.
இரத்தம் வேகமாக வெளியேறி அவன் மயங்கி விழுந்ததும் மற்றவர்கள் வந்து அவன் கழுத்தை அறுத்து அந்தப் பலியை நிறைவு செய்வார்கள். அவர்கள் அவனை அந்த சிலை முன்பு படைக்கிறார்கள்.

அடுத்து வரிசையில் ஆளத் தகுதியானவன் அந்த ஆலயத்தின் ஆளுமையை மக்களின் தலைமையை ஏற்று செல்லக் கூடியவன். அடுத்த 12 ஆண்டுகளுக்கு ஆண்டு முடித்த பிறகு தன் உயிர் தியாகத்துக்கும் தயாரானவன் அப்பொழுதே அவர்களின் தலைவன் ஆகிறான்.
கொல்லம் ராஜாவுக்கு சொந்தமான காயல்   City of Cael என்கிற துறைமுக நகரமும் இருக்கிறது. அங்கும் மூர் இனத்தவர்களும் பிற தேச வணிகர்களும் நிறைய இருக்கிறார்கள். மலபாரில் இருந்து நிறைய கப்பல்களும் , கரமண்டல் பகுதியில் இருந்தும் பெங்குவலா Benguala ( அட்லாண்டிக் சமுத்திரத்துக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையிலான நீரோட்டம். ஆப்பிரிக்காவை கடந்து இந்த நீரோட்டத்தின் வழி இந்திய பெருங்கடலை அடையும் கடல் வழி) வழியிலும் நிறைய வணிகர்களும் கடலோடிகளும் வர வசதியான கரைப் புகலிடம்.
இங்குள்ள Chatis சட்டிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள். ஏராளமான நவரத்தினங்கள் வைத்திருப்பவர்கள் . முத்து எடுத்துக் கொள்வதற்கும் மீன் பிடிப்பதற்குமான பிரத்தியேக உரிமைகளை அரசரிடமிருந்து பெற்றிருப்பவர்கள்.
இங்குள்ள மூர் இனத்தவர்களின் செல்வாக்கு மிக்க தலைவன் கிட்டத்தட்ட அரசர் போன்றே மதிப்பும் மரியாதையும் பெறுகிறான் அவனுக்கு இங்கு எடுக்கப்படும் முத்துக்கள் மீது வரி விதிக்கும் உரிமை இருக்கிறது. அவன் வழங்கக்கூடிய நீதி பரிபாலனத்தில் அரசர் தலையிடுவதில்லை. அங்குள்ள மீனவர்கள் வாரத்தின் பிற நாட்களில் தங்களுக்காக பணிபுரிந்து கொண்டு வெள்ளிக்கிழமை படகு உரிமையாளர்களுக்காகப் பணி புரிய வேண்டும். ஒவ்வொரு முத்தெடுக்கும் பருவம் முடியும் பொழுதும் ஒரு வாரம் முழுவதும் மூர் தலைவனுக்காக  முத்தெடுக்கும் பணி புரிய வேண்டும். இதனால் அவனிடம் ஏராளமான முத்துக்குவியல்கள் இருக்கும்.
இந்தப் பகுதியில் அருகிலேயே ஆட்சி நடத்தும் கொல்லம் அரசரே இந்தப் பகுதியின் ஏகபோக உரிமையாளராகவும் மிகப்பெரிய செல்வந்தராகவும் கடவுளுக்கு நிகரானவராகவும் மிகப்பெரிய போர்வீரர் படையை உடையவராகவும் இருந்தார்.

உலகின் தலைசிறந்த வில் வித்தை வீரர்கள் நூற்றுக்கணக்கில் அவரிடம் இருந்தார்கள். இளம் வயதில் இருந்தே பயிற்றுவிக்கப்பட்ட 400 வில்வித்தை வீராங்கனைகள் அரசர் பவனி வரும்போது அவரைச் சுற்றி பாதுகாப்புக்காக வருவார்கள்.  பட்டு நிறத் துணிகளை தங்கள் தலையில் இறுக்கமாக கட்டியிருந்த அந்த வீராங்கனைகள் மிகவும் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்கள். கொல்லம் அரசர் அந்தக் காலத்தில் மிக பலசாலியாக இருந்த நரசிங்க மன்னனிடம் அடிக்கடி போர் புரிந்து தன் ராஜ்யத்தைக் காப்பாற்றி வந்தார். (விஜய நகரப் பேரரசை போர்ச்சுகீசியர்கள் நரசிங்க ராஜா என்றே தங்கள் குறிப்புகளில் குறிப்பிடுவார்கள்.)

கடற்கரை ஒட்டி வடக்கு நோக்கி 70 – 80 கடல் மைல்கள் பயணப் பட்ட பிறகு கரமண்டல் Charamandel கடலோர சமவெளி பகுதி வருகிறது. இப்பகுதியில் நிறைய நகரங்கள், கிராமங்கள், குடியிருப்புகள் தென்படுகின்றன. இந்தப் பகுதி முழுவதும் நரசிங்க ராஜாவின் ஆளுகையின் கீழ் வருகிறது. இந்தப் பகுதியில் அரிசி கோதுமை முதலிய ஏராளமான தானியங்கள்,  இறைச்சி, எல்லா விதமான காய்கறிகளும் கிடைக்கின்றன. இது ஒரு பரந்த சமவெளி பிரதேசமாக இருக்கிறது

 மலபார் பகுதியில் இருந்து வருடம் முழுவதும் கப்பல்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன.  ஏராளமான அளவு அரிசியை கொண்டு செல்கின்றனர். Cambaya காம்பாயா ( குஜராத் டையூ ஆகிய காம்பே வளைகுடா பகுதி) வில் இருந்து தாமிரம், வெள்ளி, ஏலக்காய், குங்குமம், நறுமணப் பொருட்கள் என  ஏராளமான பொருட்கள் விற்பதற்குக் கொண்டு வரப்படுகின்றன.    மலபார் பகுதிகளில் எங்கள் போர்த்துக்கீசிய கப்பல்களின் நடமாட்டம் காரணமாக பயப்படும் மூர் இனத்தவர்கள் நறுமணப் பொருட்களையும் மருந்து பொருட்களையும்  சீனா, பெங்குவலா,  மலாக்கா  பகுதிகளில் இருந்து இந்தப் பகுதி வழியாகவே கொண்டு வருகிறார்கள்.  

இந்தியாவிலேயே கம்பாயாவுக்கு  அடுத்தபடியாக எல்லா பொருட்களும் கிடைக்கக் கூடிய மிகச் சிறந்த வணிகப் பகுதி இதுதான் என்றாலும் மழை இல்லாத காலங்களில் நிறைய பேர் பசியால் இறந்து போகக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படுவதும் உண்டு. அப்போது அவர்கள் நான்கு அல்லது ஐந்து பணங்களுக்கு தங்கள் குழந்தைகளைக் கூட விற்பார்கள். அது மாதிரி சமயங்களில் மலபாரிகள் அரிசியும் தேங்காயும் கப்பல் நிறைய கொண்டு வந்துகொடுத்து  விட்டு அதே கப்பல் நிறைய அடிமைகளை ஏற்றிச் செல்வார்கள்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மூர் இனத்தவர்களும் சட்டிகளும் Chattis  இந்தியா முழுவதும்  சென்று வசித்து தொழில் செய்யக்கூடிய அளவுக்கு பெரும் செல்வந்தர்களாகவும் தந்திரக் காரர்களாகவும்  இருந்தார்கள். துறைமுகங்களிலும் மூர்கள் மிகப்பெரிய வியாபாரிகளாகவும் நிறைய கப்பல்களின் சொந்தக்காரர்களாகவும் இருந்தார்கள்.
( தொடர்ச்சி அடுத்த பதிவில்)
-முத்துக்குமார் சங்கரன்

 May be an image of text

 May be an image of text

May be an image of map

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக