திங்கள், 10 அக்டோபர், 2022

தலையில் அடித்துக் கொண்ட CM ஸ்டாலின்.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்து வெறுப்பேற்றிய பொன்முடி

 tamil.asianetnews.com -  Ajmal Khan : தலையில் அடித்துக் கொண்டு அட்வைஸ் செய்த ஸ்டாலின்.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்து வெறுப்பேற்றிய பொன்முடி
 நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்;
சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும், அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய போது அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்து கொண்டு சிரித்தது விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
அமைச்சர்கள் பேச்சு- ஸ்டாலின் வேதனை
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் பேச்சு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் இந்து மதம் தொடர்பான பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தனியார் நிறுவன உரிமையாளரை இடத்தை காலி செய்ய சொல்லி மிரட்டல் விடும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. இதே  போல உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு இலவசமாக செயல்படுத்தி வரும் திட்டத்தை ஓசி டிக்கெட் எனக்கூறி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கிராம சபை கூட்டத்திலும் பெண்ணை ஒருமையில் பொன்முடி பேசிய காட்சி கண்டனத்திற்குள்ளாக்கியது. இது போன்ற செயல்களை பாஜகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

நிர்வாகிகளால் உடல்நிலை பாதிப்பு
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகளை விமர்சித்து பேசினார். குறிப்பாக  தமிழகத்தில் மழை பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள், மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்.  திமுக, பழுத்த மரமாக இருப்பதால் மட்டும் தான் கல் எறிகிறார்கள், ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? நாள்தோரும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என வேதனையோடு கூறினார்.

திமுக தொண்டனை செருப்பு தூக்கவைத்த டி.ஆர் பாலு... ஸ்டாலின் படித்து படித்து சொல்லியும் திருந்தல..
சிரித்து வெறிப்பேற்றிய பொன்முடி

மேலும் அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன். பொதுமேடையில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்களிலும் கவனமுடன் பேச வேண்டும் பேச்சின் ஒரு பகுதியை வெட்டி சர்ச்சைக்குள்ளாக்குவதாக கூறினார்.

இப்படி உருக்கமாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்து கொண்டு சிரித்தது விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது. பாஜகவினர் இந்த காட்சிகளை சுமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். நீங்கள் என்ன தான் சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம் என்பதை கூறும் வகையில் பொன்முடியின் செயல்பாடு இருந்ததாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக