சனி, 15 அக்டோபர், 2022

சத்யாவுக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கிவிட்டேன்" - முதல்வர் ஸ்டாலின்

 minnambalam.com  -  christopher :   சென்னையில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டதை அறிந்து நொறுங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த13ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்ற வாலிபரால் ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து துரைப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த சதீஷை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொலையாளி சதீஷ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15)இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் இன்று நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது வேலைவாய்ப்பு பெற்ற பட்டதாரிகளுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ”சென்னையில் மாணவி சத்யாவுக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கி போய்விட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழக் கூடாது. இதுபோல் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அறிவாற்றலோடும் திறமையோடும் சமூக நோக்கம் கொண்டவர்களாகவும் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். பாடப்புத்தகம் கல்வி மட்டுமல்ல, சமூகக்கல்வியும் அவசியமானது.

நல்ஒழுக்கமும், பண்பும் மிக்கவர்களாக வளர்ந்து வாழ்ந்து சமூக பங்களிப்பை வழங்க வேண்டும்.

இயற்கையில் ஆண் வலிமை மிக்கவனாக இருக்கலாம். அந்த வலிமை பெண்களை பாதுகாக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சில இளைஞர்கள் எப்படி வளர்கிறார்கள் என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் தெரிகிறது.

பள்ளி, கல்லூரி, பெற்றோர் சேர்ந்து இளைஞர்களை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி பாதுகாக்கப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக