சனி, 15 அக்டோபர், 2022

2022 இல் உலக உணவு தட்டுப்பாடு! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மக்களுக்கு எச்சரிக்கை

ranil wickremesinghe: Sri Lankan president Ranil Wickremesinghe reviews  progress on Indian projects - The Economic Times

jaffnamuslim.com :2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.  
உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை கூட்டுப் பொறிமுறை குறித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


இந்தக் கூட்டம் இன்று (15) அம்பாறை ஹார்டி தொழில்நுட்ப நிறுவகத்தில் நடைபெற்றது.  இதன்போது ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இதுவரை நாம் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தாலும் எவரும் பட்டினியால் வாட அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த செயற்திட்டத்தை வெற்றி கொள்வதன் மூலம் உலக உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமை இதற்கு முன்னர் இருக்கவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உணவை பெற முடியாத நிலை இருந்தபோதிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. ஆனால் தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது பொருளாதாரத்தை கடந்த வருடத்தைவிடவும் ஓரளவு மீட்டுள்ளோம். இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன.

ஒருபக்கம் பணத்தை நாம் அச்சிட்டால் பணவீக்கம் அதிகரிக்கும். கையிருப்பில் உள்ள பணத்துடன் பணிகளை முன்னெடுத்தால் வரையறைகள் ஏற்படுகின்றன. எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு, முன்நோக்கிச் செல்ல நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

எனவே இங்கு விவசாயத்தை மட்டும் நான் பார்க்கவில்லை. முழுமையான செயற்திட்டம் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. தற்போது உங்களின் பிரதேசங்களில் பயிர்ச் செய்கையை ஆரம்பியுங்கள்.

எமக்கு என்ன உணவு வகைகள் மேலதிகமாக தேவைப்படுகின்றன என்பது குறித்து எமது உணவு பாதுகாப்பு செயலணி மூலம் அறிவிக்கப்படும்.

நெல் பயிர்ச் செய்கை குறித்து பிரச்சினை இருக்காது. இந்த நிலைமை தொடர்ந்தால் எமக்கு கையிருப்பு இருக்கும். எனினும் சோளம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். முடிந்த இடங்களில் அந்தப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க வேண்டும். எனவே உங்களின் பிரதேசங்களிலும் இதனைச் செய்ய வேண்டும்.

எனவே கிராமப் புறத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்த செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளோம். அனைவரும் இதற்காக பணியாற்ற வேண்டும். முழு மாவட்டத்திலும் இதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அடுத்ததாக போஷாக்குக் குறைபாட்டில் உள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டமொன்று வேண்டும்.

எனவே, இதற்கான உணவு வங்கிகள், உணவுகளைப் பகிர்ந்தளிக்கும் சமூக சமையலறைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். இந்த செயல்திட்டங்களுக்கு அரசாங்கமும் முடிந்தளவு உதவிகளை வழங்கும்.

இந்தக் காலகட்டம் மிகவும் நெருக்கடியானது. எவரையும் பட்டினியில் இருக்க நாம் இடமளிக்கக்கூடாது. நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும்.

ஆனால் பெரும்போகத்தின் விளைச்சல் கிடைத்த பின்னர் இந்த நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். எனினும், 2023ஆம் ஆண்டு இறுதிவரை நாம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தாலும் உலக உணவுப் பற்றாக்குறை இருக்கும் என்பதால் எமது நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதன் பின்னரும் நாம் இந்தப் பொறிமுறையை நிறுத்தமாட்டோம். இதன் தொடர்ச்சியாக விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும். எனவே தான் நாம் புதிய செயற்திட்டமொன்றை முன்னேடுத்துள்ளோம்.

இந்தப் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தப் பணிகளின்போது எமக்கு கட்சி அரசியல் இருக்காது. கட்சி அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும்.

மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் அரசியலுக்கு நாம் செல்ல வேண்டும். எனவே, சம்பிரதாய அரசியலில் எந்தப் பயனும் இல்லை.

தற்போதிருந்து அடுத்த ஏப்ரல் மாதம் வரை நாம் உற்பத்திகளை முன்னெடுக்க வேண்டும். விசேடமாக பெரும்போகத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

இதற்கு ஒத்ததாக நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வருகிறது. விசேடமாக சுதந்திரம் கிடைத்த பின்னர் டி.எஸ்.சேனாநாயக்கவினால் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா நீர்ப்பாசன செயற்திட்டம் அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கிறது. இந்தச் செயற்திட்டத்திற்கு யாரிடமும் கடன் வாங்கவும் இல்லை, உதவி வாங்கவும் இல்லை.

 அரசியல் பேதங்கள் இன்றி அனைவரும் இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விவசாய அமைச்சரும், பிரதமரும் இந்தப் பிரதேசத்திற்கு வந்து, இந்தச் செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து பார்ப்பார்கள்.

எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பணியை முன்னெடுப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன். நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் இந்த சவால்களை இதற்கு முன்னர் நாம் எப்போதுமே எதிர்கொண்டதில்லை.

எமது பெற்றோர், மூதாதையர் கூட இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவில்லை. இது எமக்கு புதிய சவால். நாம் சரியாக செயல்பட்டால், இதில் வெற்றியடைந்து இன்னும் பலம் பெறுவோம். எனவே, அடுத்த வருடத்தில், இந்த அடிப்படை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நாம் பணியாற்றுவோம் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக