திங்கள், 10 அக்டோபர், 2022

புதிய தலைமுறை, நியூஸ் தமிழ், பாலிமர் போன்ற டிவி மீடியாக்கள் அரசுக்கு எதிராக திரும்பியிருக்கிறது?

ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்-

Uthayamugam  : கட்சி நிர்வாகிகள் மட்டுமல்ல முதல்வரே, ஆட்சியில் அதிகாரிகள் உருவாக்கும் அவப்பெயரையும் கவனிங்க - உளவாளி
திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அவரை தூங்கவிடாமல் தவிக்க வைக்கும் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்து அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய உரையை கேட்ட கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் முதலமைச்சருக்காக வருத்தப்பட்டார்கள்.
ஆனால், முதலமைச்சர் வேதனையுடன் பேசும்போதே அமைச்சர் பொன்முடி நக்கலாக சிரித்தார். அவர் மட்டுமல்ல, மூத்த நிர்வாகிகளில் பலர் முதலமைச்சரின் உழைப்பை மதிப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அதுமட்டுமல்ல, முதலமைச்சரின் உழைப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீராகப் போகுமளவுக்கு, ஆட்சி நிர்வாகத்திலும் மூத்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பலமுறை இதுகுறித்து எழுதியுள்ளோம். ஆனால், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்து வெளிவரும் ஊடக செய்திகளை முதலமைச்சருக்கு தெரிவிக்கும் அதிகாரிகள், அதிகாரிகளை குறித்து வெளிவரும் செய்திகளை முதலமைச்சரின் பார்வையிலிருந்து மறைத்துவிடுகிறார்கள்.


இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. முதலமைச்சர் முற்றும் முழுவதுமாக அதிகாரிகளை சார்ந்தே இருப்பதாகவும், தாங்கள் இல்லாமல் அரசு இயந்திரம் அணுவளவும் அசையாது, முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தாங்கள் மட்டுமே காரணம் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

குறிப்பாக அரசின் திட்டங்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்குச் சேர்ப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட செய்தித்துறை குறித்து கிடைக்கிற செய்திகளை முதலமைச்சரின் பார்வைக்கு வைக்கிறோம்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபோது பல்வேறு துறைகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் ஊடகங்கள் மூலம் மக்களிடம் எளிதில் போய் சேர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கும் புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டார்.

இளைஞர், தமிழ் வழியில் பயின்று, இந்திய குடிமையியல் அதிகாரி ஆனவர் என்ற அடிப்படையில் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு நியமிக்கப்பட்ட ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்-சின் செயல்பாடுகள் தொடக்கம் முதலே விமர்சனத்திற்கு உள்ளாயின. அனுபவம் வாய்ந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தபோதும் தமிழக அரசின் முக்கியமான செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறைக்கு போதிய அனுபவம் இல்லாத ஜெயசீலனை நியமித்ததை பலரும் விரும்பவில்லை.

அதற்கெற்றார்போல், அவரின் செயல்பாடுகளும் அமைந்தன. தன்னுடைய துறையில் பழுத்த அனுபவம் மிகுந்த, மூத்த அதிகாரிகள் இருந்தும் அவர்களை மதிக்காமல் செயல்படுகிறார். அவர் பெயருடன் இணைந்து ஐ.ஏ.எஸ் என்ற வார்த்தையும் இருப்பதால் ஆணவத்தில் ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டுகளை அவருடன் பணி செய்யும் / செய்த சக ஊழியர்களே சகட்டுமேனிக்கு பகிர்ந்தனர்.

தான் ஐ.ஏ.எஸ் என்ற ஆணவத்தில் அவரது அறைக்கு அவரது துறையை சேர்ந்த அதிகாரிகளோ, பி.ஆர்.ஓக்களோ யார் வந்தாலும் அமரக்கூட சொல்லாமல், அதிகார தொனியில் நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அவரை இன்னும் பின் தொடர்கின்றன. ஆனாலும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தயவு இருப்பதால், தன்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற கர்வத்தில் இருக்கிறார் ஜெயசீலன் என அவர் அறைக்கு வெளியேயே கிசுகிசுப்புகள் கேட்கின்றன.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை என்பது முதலமைச்சர், முதலமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அவற்றின் பயன்கள் உள்ளிட்டவற்றை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் பணியை செய்வதுவதான். ஆனால், ஜெயசீலனோ தன்னையே முதலமைச்சர் என்று நினைத்துக்கொண்டு, தன்னை முன்னிலைப்படுத்தும் வேலைகளுக்குதான் மெனக்கெடுகிறார் என அவர் துறையை சார்ந்தவர்களே நாளும்பொழுதும் அவரை விமர்சித்து தள்ளுகிறார்கள்.

• எங்கு என்ன நிகழ்வு நடந்தாலும், அதில் முதலமைச்சரே கலந்துகொண்டிருந்தாலும் தான் எங்கே நிற்கிறேனோ அது வரையில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தன் துறையின் புகைப்பட கலைஞர்களுக்கு வாய்மொழி உத்தரவை அளித்திருக்கிறார் ஜெயசீலன்.

• அப்படியான புகைப்படங்களை எடுத்து நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக தனனுடைய வாட்ஸ் – அப் ஸ்டேடஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான அதிகாரி நான் தான் என்பதைபோல எல்லோர் மத்தியிலும் கொண்டுச் செல்கிறார்.

• அரசு திட்டங்களின் விளம்பரங்களை ஏஜென்சி மூலம் ஊடகங்களுக்கு தரகராக கமிஷன் பேசி, அதிலும் கல்லா கட்டுகிறார்.

• அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், வைகைச்செல்வன் ஆகியோரிடம் வாட்ஸ் – அப் மூலம் அடிக்கடி பேசி தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்.

• யாரையும் மதிப்பதில்லை. நல்ல ஆலோசனைகள் சொல்பவர்கள் குறித்தும் கண்டுக்கொள்வதில்லை.

• அவருடைய பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கூட பேசுவதை குறைத்துக்கொண்டு, உங்களைவிட நான் உயரதிகாரி என்ற பாணியில் செயல்படுவதால் அவர்களே கடும் அப்செட்.

• கள நிலவரங்கள் எதையும் கண்டுக்கொள்ளாமல் சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை வைத்தே செய்தித்துறையை நடத்திவிடலாம் என்ற குருட்டு பார்வையால் துறையையே குருடாக்கிக்கொண்டிருக்கிறார்.

இவை மட்டுமா ? முதலமைச்சருக்கு ஆலோசனை சொல்வதே நான் தான். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஒற்றை ஆளாய் நின்று பார்த்தவனும் நான் தான் என சகட்டுமேனிக்கு எல்லா பக்கமும் அடித்துவிடும் இவர் உண்மையிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரிதானா என்ற கேள்வி எழுகிறது.

மிக முக்கியமாக, பத்திரிகை / அச்சு / காட்சி / டிஜிட்டல் ஊடகங்களை எப்படி அணுகுவது என்ற பாலபாடம் கூட இவருக்கு தெரியவில்லை. இவரது புகைப்படத்தை மட்டும் எப்படியாவது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துவிடவேண்டும் என்று மட்டும் மெனக்கிட்டுக்கொண்டிருக்கிறார்.

பிரபல பத்திரிகையில் முந்தைய நாள் நடந்த முதலமைச்சர் நிகழ்ச்சியோ / அவர் குறித்த செய்திகளோ வரவில்லையென்றால் கூட பரவாயில்லை. ஆனால், ஜெயசீலன் படம் பொறிக்கப்பட்டு வந்துவிடவேண்டும் என்று முதலமைச்சரையே முந்த நினைக்கிறார் என தலைமைச்செயலக அதிகாரிகளே வேதனைப்படுகின்றனர்.

ஜெயசீலன் புகழ்பாடும் ஒரு சில பத்திரிகையாளர்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக்கொண்டு, பல ஊடகங்களை அவர் பகைத்துக்கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்களிடமும் ஊடக நிறுவனங்களிடமும் எப்படி நயமாக பேசி, அரசு தொடர்பான பாசிட்டிவ் செய்திகளை வரவழைப்பது என்று கூட அவருக்கு தெரியவில்லை என்கிறார்கள். அதனாலேயே அரசுக்கு ஆதரவாக இருந்த பல ஊடங்கள் அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டன.

இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரும் அமைச்சருமான ஐ.பெரியசாமியுடன் தானும் வாண்ட்டடாக லண்டன் சென்றார். தமிழ்நாட்டிற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபோது கூட, அந்த முக்கியமான நிகழ்வை சரியாக ஒருங்கிணைக்காமல் செய்தித் துறை திணறியதற்கு ஜெயசீலனின் வாட்ஸ் –அப் அறிவுறுத்தல்களும் சொதப்பல் உத்தரவுகளுமே காரணம் என்கின்றார்கள்.

ஆனால், எவ்வளவு சொதப்பல்கள், இடியாப்ப சிக்கல்கள், அதிகார தொனி, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை ஜெயசீலன் செய்தாலும், அவர் பற்றி யார் புகார் செய்தாலும் முதலமைச்சரே நினைத்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். ஏன் என்று கேட்டால், முதலமைச்சரின் தனிச்செயலர் உதயசந்திரனின் ஆசி பெற்றவராக ஜெயசீலன் திகழ்வதால், அவரை மாற்றி அனுபவமும் பக்குவமும் ஊடகங்களுடன் இணக்கமாக இருக்கும் இன்னொருவரை போட அவர் விடவே மாட்டேன் என்கிறார்கள் உயரதிகாரிகள்.

சர்வதிகாரம் மூலம் ஊடங்களை கட்டுப்படுத்தி விடலாம், எதிர்ப்பு செய்திகள் போட்டால் கேபிள் நம்பரை மாற்றிப் போட்டு மிரட்டிவிடலாம் என்று ஜெயசிலன் நினைத்து செயல்பட்ட காரணத்தினால்தான் முக்கியமான காட்சி ஊடகங்களான புதிய தலைமுறை, நியூஸ் தமிழ், பாலிமர் போன்ற டிவி மீடியாக்களே அரசுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. ஆனால், இவை கூட ஜெயசீலனுக்கு தெரியாது.

அரசு நிகழ்ச்சிகளில் சில செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு, அவர்களுக்கு விளம்பரங்கள் கொடுக்காமல் புறக்கணிப்பு என்று கடைந்தெடுத்த முட்டாள்தனத்தோடு செயல்படும் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்-சால் முதலமைச்சரின் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு பங்கம் வந்திருக்கிறதே தவிர, செய்தித்துறையால் ஒருபோதும் அவரது திட்டங்களுக்கோ அறிவிப்புகளுக்கோ ப்ரோமோஷன் வரவில்லை.

மேல் குறிப்பிட்ட அத்தனை விஷயங்களும் உண்மை. ஆனால், இவற்றைக் கூட முதல்வரோ, தலைமைச் செயலாளரோ நம்ப வேண்டாம். ஜெயசீலனை பற்றி மூத்த ஊடகவியலாளர்களிடமும் அவர் துறைசார்ந்த அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் ரகசியமாக விசாரித்தாலே அவர் குட்டு வெளிப்பட்டுவிடும். அதன்பிறகாவது இவரை மாற்றிவிட்டு, அரசுக்கு நற்பெயரை கொண்டுவரும் ஒரு அதிகாரியை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநராக போடலாமே ?

-உளவாளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக