வியாழன், 6 அக்டோபர், 2022

தெலங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையில் தேசிய கட்சி ‘பாரத் ராஷ்டிர சமிதி உதயம்

hindutamil.in தெலங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையில் தேசிய கட்சி ‘பாரத் ராஷ்டிர சமிதி உதயம்
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என தேசிய கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக கடந்த 2001ம் ஆண்டு கே.சந்திரசேகர ராவால் தோற்றுவிக்கப்பட்டது தெலங்கானா ராஷ்டிர சமிதி. ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக உருவாகியது. இதையடுத்து, 2014-ல் தெலங்கானாவின் முதல் முதல்வராக பதவி ஏற்ற சந்திரசேகர ராவ், 2018-ல் மீண்டும் முதல்வராக தேர்வானார். தெலங்கானா சட்டப்பேரவைக்கான அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
மத்திய ஆளும் கட்சியான பாஜகவை கடுமையாக எதிர்த்த வரும் சந்திரசேகர ராவ், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பாஜகவுக்கு மாற்றாக தேசிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இருப்பதாகக் கூறி வந்த சந்திரசேகர ராவ், விஜயதசமி நாளான இன்று இதற்காக தனது கட்சியின் பொதுக்குழுவை தலைநகர் ஹைதராபாத்தில் கூட்டினார். இந்தக் கூட்டத்திற்கு வருகை தருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் பெயரான தெலங்கானா ராஷ்டிர சமிதியை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றுவதற்கான தீர்மானத்தை கே.சந்திரசேகர ராவ் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, கட்சியின் பெயர் இனி பாரத் ராஷ்டிர சமிதி என அழைக்கப்படும் என்றும், இது தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மத ரீதியாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் காணும் பாஜகவுக்கு மாற்றாக பாரத் ராஷ்டிர சமிதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, நல்லாட்சிக்கான மாடலாக தெலங்கானா மாநில ஆட்சி இருக்கிறது என்பதை தேசிய அளவில் பிரசாரம் செய்ய பாரத் ராஷ்டிர சமிதி முடிவெடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக