செவ்வாய், 11 அக்டோபர், 2022

ராஜஸ்தானில் 108 வயது மூதாட்டி காலை வெட்டிய மர்ம கும்பல்.. வெள்ளி கொலுசுக்காக கொடூரம்..

kalaignarseithigal.com  - KL Reshma  ;  வெள்ளி கொலுசுக்காக 108 வயதுடைய மூதாட்டியின் கால் பாதத்தை வெட்டி கொலுசை திருடி சென்றுள்ள கும்பலின் வெறிச்செயல் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமுனா தேவி. 108 வயதுடைய மூதாட்டியான இவர், தனது மகள் மற்றும் பேத்திகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கமாக திண்ணையில் படுத்து உறங்குவது போல், சம்பவத்தின்றும் மூதாட்டி உறங்கியுள்ளார்.
அப்போது சுமார் காலை 5.30 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கியுள்ளனர். மேலும் அவரை இழுத்து வந்து வீட்டின் வெளிப்புறத்திலுள்ள கழிப்பறையில் வைத்து அவரது பாதத்தை வெட்டி அதிலிருந்த வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் தனது தாயை காணவில்லை என்று மகள் தேடிப்பார்க்கையில், மூதாட்டி இரத்த காயங்களுடன் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகரிப்பேரின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டியிடம் வாக்குமூலம் பெற்றதுடன் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு அதில் பதிவாகியிருந்த திருடர்களின் அடையாளங்களை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெள்ளி கொலுசுக்காக 108 வயதுடைய மூதாட்டியின் கால் பாதத்தை வெட்டி கொலுசை திருடி சென்றுள்ள கும்பலின் வெறிச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக