திங்கள், 29 ஆகஸ்ட், 2022

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்; சுப்பிரமணியன் சுவாமி மனுவுக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

மாலைமலர் : புதுடெல்லி: பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுப்பிரமணியசுவாமி சார்பாக விஷேஷ் கனோடியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில் தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க அரசு அறிவித்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் மூலம் தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோவில்களில் அர்ச்சர்களை தமிழக அரசு நியமிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அந்த நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற் கொள்ள வேண்டும் எனவும் கோவில் சொத்துகளின் உரிமையாளராக அரசு இருக்கக்கூடாது, சமயம் சார்ந்த செயல்பாடுகளில் அரசு தலையிடக்கூடாது எனவும் உத்தரவிட மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.அந்த மனு நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமை யிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மனுக்கள் நிலுவையில் உள்ளதே? அவ்வாறு இருக்க இதில் என்ன நிவாரணம் கோருகிறீர்கள் என வினவினார்.

அதற்கு, சுப்பிரமணிய சுவாமி, அர்ச்சகர் நியமனம் தொடர்பாக எந்த மனுவும் நிலுவையில் இல்லை.

அதற்கு நீதிபதிகள், கோவில் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வழக்கே நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து வாதிட்ட சுப்பிரமணியசுவாமி, தற்போது தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஏனெனில் அர்ச்சகர்கள் நியமனம், நிர்வாகம் உள்ளிட்டவற்றை கோவில் நிர்வாகமே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள் தற்போதைய நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. எனவே இந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் சுப்பிரமணிய சுவாமி, இந்த வழக்கில் முடிவு வரும்வரை அர்ச்சகர் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தயானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்குடன் இணைத்து, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக