திங்கள், 29 ஆகஸ்ட், 2022

காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி! காஷ்மீர் முதல்வர் வேட்பாளர்!

Oneindia Tamil  -Mathivanan Maran  :  ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என்றும் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜி.எம். சரூரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக இருந்தார். மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் குலாம் நபி ஆசாத்.
காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பிக்க கட்சி கட்டமைப்பில் சீரமைப்பு தேவை என்பது குலாம் நபி ஆசாத்தின் நிலைப்பாடு. இதேபோன்ற ஒத்த கருத்துடைய 23 மூத்த தலைவர்கள் இணைந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினர். கட்சியின் தலைமை முதல் அடிமட்டம் வரை மாற்ரம் தேவை என்பது இந்த ஜி23 எனப்படும் கலகக் குரல் தலைவர்களின் கோரிக்கை.

இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் அக்கறையுடன் பரிசீலனை செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மூத்த தலைவர்கள் குட்பை சொல்லிவிட்டு வெளியேறுவது தொடர் நிகழ்வாகி வருகிறது. இந்தப் பட்டியலில் அண்மையில் குலாம் நபி ஆசாத்தும் இணைந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸின் ஜம்மு காஷ்மீர் முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். காங்கிரஸின் இந்த பேரழிவுக்கு காரணமே ராகுல் காந்திதான்; சீனியர்களுடன் ஆலோசனை நடத்தும் போக்கையே ராகுல் காந்தி கைவிட்டு விட்டார்; இதனால் ராகுலின் பி.ஏ. கூட காங்கிரஸ் தொடர்பான முடிவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என குமுறியிருந்தார் குலாம் நபி ஆசாத்.

குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் ஒட்டுமொத்த காங்கிரஸும் குலாம் நபி ஆசாத் பின்னால் அணிவகுத்து நிற்கிறது.

இந்நிலையில் குலாம் நபி ஆசாத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சரூரி கூறியதாவது: குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி ஒன்றை தொடங்க உள்ளார். குலாம் நபி ஆசாத், தேசிய கட்சியைத்தான் தொடங்குகிறார். இருந்த போதும் ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் வேட்பாளராக குலாம் நபி ஆசாத் முன்னிறுத்தப்படுவார். இவ்வாறு சரூரி கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தற்போது அவரது பாணியில் குலாம்நபி ஆசாத்தும் தனி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக