திங்கள், 6 ஜூன், 2022

ஹிந்து/திய .. வல்லரசு கனவில் இருந்து வழுக்கி விழுந்த தேசம் ..

May be an image of 3 people, beard and text that says 'K”MAN KAMAL HAASAN RAAJKAMAL FILMSINTERNATIONAL FILMS LOKESH VIKRAM VIJAY SETHUPATHI FAHADH ANIRUDH MUSICAL PRODUCED BY KAMAL HAASAN .MAHENDRAN FAASIL'
May be an image of 2 people and people standing
May be an image of 1 person and text

LR Jagadheesan  :  “ஹிந்து/திய வல்லரசுக்கனவு”
“தெய்வபக்தியும் தேசபக்தியும்” இந்துத்துவத்தின் இரு கண்கள். வரலாறு நெடுகிலும் எல்லாவகையான வல்லரசுகளின் வலிமையான அரசியல் கருத்தியல் ஆயுதங்களும் அவையே. உலக வல்லரசுகளின் ஆயுதங்களில் வில்லும் வாளும் ஈட்டியும் துப்பாக்கியும் பீரங்கியும் அணுகுண்டுகளும் மட்டும் இருக்கவில்லை. அவற்றின் அம்பராத்தூணிகளில் இருந்த/இருக்கும் வலிமைவாய்ந்த அம்புககள் கலை, இலக்கிய படைப்புகள்.
இந்திய புராண இதிகாசங்களில் இருந்து தமிழ் சங்கப்பாடல்கள்; பரணிகளில் இருந்து சோழசாம்ராஜ்ஜியங்களில் இருந்து நவீன அமெரிக்க வல்லரசின் வல்லமையை பறைசாற்றும் ஹாலிவுட் படங்கள் வரை வரலாறு நெடுக கலை இலக்கிய படைப்புகள் அந்தந்தகாலகட்டத்தின் வல்லரசுகளுக்கான ஏக்கத்தையும் ஏற்பையும் வெகுமக்களிடம் ஏற்படுத்தும் “கரசேவையை” செய்தே வந்திருக்கின்றன.

இன்றுவரை செய்தும் வருகின்றன.
நம் சமகாலத்தில் இந்திய நகர்ப்புற நடுத்தரவர்க்கத்திடம் பீறிட்டு அடிகத்துவங்கியிருக்கும் “ஹிந்து/திய வல்லரசு”க்கான வெகுமக்கள் ஏக்கத்தையும் ஏற்பையும் ஒருசேர உருவாக்குவதில் நவீன கலை இலக்கிய வடிவமான திரைப்படங்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக PAN-INDIA சந்தைக்கு சரக்கு விற்க முனையும் கலை இலக்கிய வியாபாரிகளின் வெற்றிக்கான minimum guarantee/mega-hit scope கொண்ட formula தான் தெய்வபக்தி/தேசபக்தி combination.
RRR நடந்துமுடிந்த வரலாற்றை, காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தை, தற்காலத்தின் ஹிந்துத்துவ அரசியல் கரம்மசாலாவில் குழைத்து கொடுத்தது. மெகா வெற்றி. ஆயிரம் கோடிகளுக்கும் மேல் அள்ளியது. விக்ரம் முதல் பாகமும் தற்போதய அதன் இரண்டாவது மலிவுப்பதிப்பும் இந்தியாவின் எதிர்கால வல்லரசுக்கனவை தற்கால உலக வல்லரசான அமெரிக்க சினிமாபாணியில் அதற்கு முந்தைய வல்லரசான பிரிட்டனின் ஜேம்ஸ்பாண்ட் படங்களை முன்மாதிரியாகக்கொண்டு இந்திய ஒன்றியத்தின் உளவுத்துறை சாகசவீரன் மூலம் பிரதி செய்ய முயன்றிருக்கிறது. இதுவும் மிகப்பெரிய வெற்றிப்படமாகவே அமைந்திருக்கிறது.
இந்த இருபடங்களும் இவைபோன்ற படங்களும் The Family man போன்ற தொடர்களும் Pan-India marketக்கு மட்டுமல்ல NRI marketக்கும் சேர்த்தே உருவாக்கப்பட்ட வலிமையான கலை சரக்குகள்.
இந்த படத்தின் இடைவேளையில் NRIகளுக்குள் நடந்த நீண்ட உரையாடலின் ஒரு துளி (விஷம்) இது—
“அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லாமே அடிப்படையில் வெள்ளைக்கார, கிறிஸ்தவ நாடுகள். முஸ்லிம்களுக்கும் பலநாடுகள் இருக்கின்றன. அதேமாதிரி உலகில் பல பௌத்தநாடுகள் இருக்கு. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் உலகில் நாடுகள் இருக்கும்போது இந்துக்களுக்கு உலக்ல் இந்தியா என்கிற ஒரே ஒரு நாடு தானே இருக்கு? அது இந்துக்களின் நாடாய் இருந்தால் என்ன தப்பு?”
இந்த (விதண்டா)வாதத்தை வைத்தவர் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு படிக்க வந்து இங்கேயே தங்கி பிரிட்டன் குடியுரிமை பெற்ற மருத்துவர். இந்திய குடியுரிமையை துறந்தவர். தனிமனிதராக எல்லாவகையிலும் நாகரீகமானவர் மட்டுமல்ல மற்றவர்களுக்கு உதவுவதிலும் முன்னணியில் நிற்பவர்.
இவரைப்போன்ற நன்குபடித்த நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தின் இந்த அணுகுமுறைதான் ஹிந்து/திய வல்லரசுக்கனவின் அடிப்படை கோளாறு/பிரச்சனை.
நாடுகள்/இனங்கள்/இனக்குழுக்கள் வல்லரசு கனவு காண்பதும் அதை நோக்கி பயணிப்பதும் வரலாற்றில் புதிதல்ல. ஒருவகையில் மனித வளர்ச்சிப்படிநிலையில் இத்தகைய கனவுகள் கட்டமைப்புகள் தவிர்க்க முடியாதவையும் கூட. ஆனால் நீங்கள் யாரை நாட்டின் பொது எதிரியாக காட்டி அந்த கனவை கட்டியமைக்கிறீர்கள் என்பது மிக மிக மிக முக்கியம்.
சொந்தநாட்டின் குடிமக்களில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பகுதியினரை (மக்கள் தொகையில் சுமார் 20% பேர்) அவர்களின் மதத்தின் பெயரால் ஒட்டுமொத்த நாட்டின் முதன்மை எதிரிகளாக அறிவித்துவிட்டு கட்டமைத்துவிட்டு; ஏறக்குறைய சரிபாதி மக்கள் தொகையை மொழியின் பெயரால் இரண்டாம்தரக்குடிமக்களாக நடத்திக்கொண்டு ஒரு நாடு காணும் வல்லரசுக்கனவு என்பது உண்மையில் வல்லரசுக்கான கனவல்ல. பெரும்பான்மைவாதம் பாசிசவாதமாக பரிணமிக்கும் விபரீதம். அது தான் ஹிந்து/திய வல்லரசுக்கனவின் அடிப்படை பிரச்சனை. அது இந்திய வல்லரசுக்கனவல்ல. ஹிந்து/திய வல்லரசுக்கனவு. அதற்கான ஏற்பை/ஊக்குவிப்பை இத்தகையை திரைப்படங்கள் வெகு இயல்பாய் உருவாக்குகின்றன. ஒத்தூதுகின்றன. அதுதான் இவற்றின் ஆபத்து.
பிகு: இத்தனைக்குப்பின்னும் உங்களுக்கு இந்தவாதம் மிகைப்படுத்தப்பட்ட அபத்தமாய் பட்டால் எளிமையாக ஒரு கேள்விக்கு விடை சொல்லுங்கள். மிகச்சமீபத்தில் தான் ராஜீவ்கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு மரணதண்டனைவிதிக்கப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் சிறையில் இருந்து முறையாக விடுவிக்கப்பட்டபோது பெரும்பாலான தமிழர்கள் அதை வரவேற்றார்கள். மனிதாபிமான அடிப்படையில். ஒருவேளை நீங்கள் இன்று கொண்டாடி மகிழும் விக்ரம் டீம் ராஜீவ்கொலைவழக்கை விசாரித்திருந்தால்? பேரறிவாளனின் கதி என்னவாகியிருக்கும்? ராஜீவ்கொலையாளிகளின் கழுத்தில் தூக்குக்கயிறு இறுகும் களுக்கென்ற ஒலியை கேட்கத்துடித்த குமுதம் இதழின் தலையங்க விருப்பம் என்றோ நிறைவேறியிருக்கும். அல்லது அதற்கும் முன்பே துப்பாக்கிமுனையில் தீர்வு ஏற்பட்டிருக்கும். அந்த குமுதம் தலையங்கசிந்தனை மரபின் கலைவடிவம் தான் விக்ரம் என்கிற வெகுஜன சினிமா. அந்த இரண்டு சிந்தனை மரபு மூலவர்களும் தெய்வபக்தியும் தேசபக்தியும் இருகண்களாய் கொண்ட தமிழ் இலக்கியவாதிகள் என்பது கொசுறுத்தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக