sunnews tv
Mathivanan Maran - e Oneindia Tamil : கொழும்பு: இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான அமரகீர்த்தி அத்துகோரள எம்.பி, போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இலங்கை தலைநகர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டு ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இருப்பினும் இலங்கை மக்களின் கோபம் தணியவில்லை. இலங்கையின் பல நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. நிட்டம்புவ, கடவத்தை மற்றும் மினுவாங்கோவில் பேருந்துகள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன.
புலத்சிங்கள பிரதேச சபை தவிசாளரும் மொறட்டுவ மேயருமான சமன்லாலின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்தனர். இந்த தீயை அணைக்க வந்தவர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனிடையே நிட்டம்புவ என்ற இடத்தில் வன்முறையில் ஈடுபட்ட ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இலங்கையில் அமைதி வழியில் போராடிய பொதுமக்கள் மீது வன்முறை கும்பலை ஏவிவிட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் சுமந்திரன் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக