மாலைமலர் : சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் -தமிழக அரசு
தீக்குளித்து கண்ணையா இறந்ததை கண்டித்து ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று கிரீன்வேஸ் சாலை ரெயில் நிலையம் முன் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயையொட்டி உள்ளது. இந்த தெருவில் இருந்த 625 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பக்கிங்காம் கரையோரம் இருந்த 366 வீடுகள் அகற்றப்பட்டது.
மீதி உள்ள 259 வீடுகளை உடனடியாக அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் அங்குள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் உதவியுடன் இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. அப்போது நீர்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளை நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த கண்ணையா என்பவர் நேற்று தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்.
பொதுமக்கள் போராட்டம்
தீக்குளித்து கண்ணையா இறந்ததை கண்டித்து ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று கிரீன்வேஸ் சாலை ரெயில் நிலையம் முன் போராட்டம் நடத்தினார்கள். வீடுகள் இடிப்பை கைவிட கோரியும், தீக்குளித்து இறந்தவருக்கு நீதி கிடைக்க கோரியும் முழக்கமிட்டனர்.
இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினார்கள்.
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தை ம.தி.மு.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பா.ஜனதா செயலாளர் கராத்தே தியாகராஜன், தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பார்வையிட்டனர். தீக்குளித்து பலியான கண்ணையா குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள்.
இந்த பிரச்சினை சட்டசபையில் இன்று எதிரொலித்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு, செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) மற்றும் கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
ஆர்.ஏ.புரம் இளங்கோ தெரு, கோவிந்தசாமி நகரில் குடிசைகளை இடிப்பதை நிறுத்தவேண்டும். கனிவோடு அவர்களை அணுக வேண்டும், விளிம்பு நிலையில் உள்ள மக்களை அரசுதான் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விரிவாக பதில் அளித்து கூறும்போது, தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின்
இந்த சம்பவம் குறித்து முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:
மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறித்தும், அதில் கண்ணையா என்பவர் தீக்குளித்து இன்று காலையிலே உயிரிழந்திருக்கிறார் என்பது குறித்தும், சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை வருவாய்த் துறை அமைச்சர் இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலக்கட்டத்திலே இதுபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும்.
மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு இதுகுறித்து கலந்துபேசி, ஒரு இணக்கமான சூழ்நிலையை வரக்கூடிய காலக்கட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்துவோம்.
அவர்களுக்கான புதிய இடத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை ஒன்று, அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகளோடு வகுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களோடு, அதை விட கூடுதல் மனச் சுமையுடனுடம், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இந்தச் சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்.
இங்கே அமைச்சர் சொல்கிறபோது, அருகிலேயே, அந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு மறு குடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்ற ஒரு நிலையை எடுத்துச் சொன்னார்கள்.
ஏற்கெனவே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வீடுகளில், அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக