செவ்வாய், 24 மே, 2022

வெளிநாடுகளில் இலங்கை இராணுவத்தினர் சேவை .. அந்நியச் செலாவணியைக் கொண்டுவருவர் -இராணுவத் தளபதி

thinakkural - ச எல்.சிசில்-: மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட குழுவினர் நேற்று (23) மாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேற்படி குழுவினரை வழியனுப்பி வைக்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சென்று அக்குழுவினருடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் நாட்டு மக்களுக்கு அவசியமான பாதுகாப்பை வழங்கும் இலங்கை இராணுவம் நாட்டிற்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

“மாலியில் உள்ள எமது படையினர், களநிலவரத்தை பொருட்படுத்தாமல், கடினமான பணியைச் செய்கிறார்கள். இவ்வாறு எங்கள் படையினரின் தொழில்முறை தரம் மற்றும் அவர்களின் சிறந்த பணிகளின் மூலம் ஈர்க்கப்பட்ட ஐ.நா அமைதி காக்கும் பிராந்திய தளபதிகள் தங்களது பாராட்டுகளை எமது படையினருக்கு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து எக்காரணம் கொண்டும் நாங்கள் விலக மாட்டோம். மே 9 ஆம் திகதி 24 மணி நேரத்துக்குள் வெடித்த அமைதியின்மையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதற்காக பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது எனத் தெரிவித்த அவர் இவ்வாறான ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக