செவ்வாய், 24 மே, 2022

75 ஆண்டுகளுக்கு பின் மேமாதமே மேட்டூர் அணை தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்ச

 கலைஞர் செய்திகள் : காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (24.5.2022) தண்ணீர் திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜுன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது.


தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. 24.05.2022 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே. காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜுன் 12-க்கு முன்பாகவே, 24.5.2022 முதல் நீரைத் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவிட்டார்.

மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான தண்ணீர் திறக்கும் நாளான ஜுன் 12 ஆம் தேதிக்கு முன்னதாக முதல்முறையாக இன்று மே 24-ல் குறுவை பாசனத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மிக முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். சுதந்திர இந்தியாவில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திறந்து விடப்படுவது இதுவே இரண்டாவது முறையாகும்.

முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள்:

மேட்டூர் அணையிலிருந்து மிக முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரானது முழுமையாக டெல்டா பாசன பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய ஏதுவாகும்.

மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா பாசனப்பகுதிகளில் வழக்கத்தைவிட குறுவை சாகுபடிக்காக சுமார் 5.22 லட்சம் ஏக்கர் பயிரிட்டு அறுவடை செய்ய எதிர்பார்க்கப்படும். எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை முன்னதாக தொடங்கி செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

டெல்டா பாசன பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டதால் முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் நெல்மட்டுமல்லாமல் கோடை பயிரான பயறு மற்றும் தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது.

காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டிஎம்சி வழங்கியும், மீதமுள்ள 25.26 டிஎம்சி தண்ணீர் ஆனது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்

குறுவை பாசனத்திற்கு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 93.860 டிஎம்சி தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 5.88 டிஎம்சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று (24.5.2022) காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

சம்பா மற்றும் தாளடி பாசனம் :

மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டிஎம்சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர் அணையின் கீழ்காவிரி ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி 1700-க்கும் மேற்பட்ட மில்லியன் லிட்டர் தண்ணீர்

18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்து விடப்படும் பொழுது அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 7 x 30 மெகாவாட், என மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையினை பொருத்து அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் தேவைக்கேற்ப வழங்கப்படும். நடப்பாண்டில் காவிரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறை வைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக