செவ்வாய், 10 மே, 2022

இலங்கை வன்முறை- துப்பாக்கியால் சுட்ட எம்.பியை அடித்து கொன்ற போராட்டக்காரர்கள்

 மாலைமலர் : நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவத் தொடங்கியுள்ளது. மொரட்டுவை மேயரின் வீட்டிற்கு தீ வைத்ததால் பதற்றம் நீடிக்கிறது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது.



இன்று மதியம் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது. போலீசார், மகிந்த ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு இலங்கை முழுவதுமே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நிட்டம்புவா நகரத்தில் போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார்.

தனது காரை மறித்த போராட்டக்காரர்களை நோக்கி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அடித்துக் கொன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கலவரத்தை தொடர்ந்து, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவத் தொடங்கியுள்ளது. மொரட்டுவை மேயரின் வீட்டிற்கு தீ வைத்ததால் பதற்றம் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக