மின்னம்பலம் : தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் தம்பதி கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (58). இவரது மனைவி அனுராதா (55). இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சஸ்வத் என்ற மகனும் உள்ளனர். சுனந்தா திருமணமானவர். கணவருடன் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார். சஸ்வத்தும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
சுனந்தாவுக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் குழந்தையைப் பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த், அனுராதா இருவரும் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றனர்.
இடையில் ஸ்ரீகாந்த் மட்டும் ஒரு முறை சென்னைக்கு வந்து சென்றார். அதாவது கடந்த ஜனவரியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நிலத்தை விற்க ஸ்ரீகாந்த் மட்டும் சென்னை வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்துக்கு கார் ஓட்டுநராக இருந்தவர் கிருஷ்ணா. இவர், ஸ்ரீகாந்த் வீட்டிலேயே ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் தங்கியிருந்தார்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் (மே 7) அதிகாலை அமெரிக்காவிலிருந்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் சென்னை வந்தனர்.
விமான நிலையத்திலிருந்து ஓட்டுநர் கிருஷ்ணா இருவரையும் காரில் வீட்டுக்கு அழைத்து வந்தார். வசதி படைத்தவரான ஸ்ரீகாந்திடம் இருந்த பணத்தையும், நகையையும் கொள்ளையடிக்கக் கிருஷ்ணா தனது கூட்டாளியான ரவிராயுடன் இணைந்து கொலை செய்து தப்பியது தெரியவந்துள்ளது.
சென்னை திரும்பிய அம்மா அப்பாவிடம் பேச முயன்றபோது நீண்டநேரம் தொடர்பு கிடைக்காததால், உறவினர்கள் மூலம் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தம்பதியினர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாகச் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். விமான நிலையம் வந்ததும் ஸ்ரீகாந்தின் மகன் அமெரிக்காவிலிருந்து செல்போனில் பேசி இருக்கிறார். வீட்டுக்குப் போனதும் பேசுகிறேன் என்று இருவரும் மகனிடம் சொல்லியிருக்கின்றனர்.
இதையடுத்து அவர்களை கார் ஓட்டுநர் கிருஷ்ணா இனோவா காரில் அவர்களது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். காலை 8.30 மணி அளவில் அமெரிக்காவிலிருந்து மகன் சஸ்வத் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் ஓட்டுநர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஸ்ரீகாந்த் மகன்.
அப்போது கிருஷ்ணா, ‘நான் காய்கறி வாங்கக் கடைக்கு வந்துள்ளேன் அய்யாவும் அம்மாவும் வீட்டில் தூங்குகிறார்கள் எழுந்தவுடன் பேசச் சொல்கிறேன்’ என்று அழைப்பைத் துண்டித்துள்ளார்.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மீண்டும் சஸ்வத் தொடர்பு கொண்டார். அப்போதும் அப்பா அம்மாவின் தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் மீண்டும் கிருஷ்ணாவுக்குத் தொடர்புகொண்டு சஸ்வத் பேசினார். அப்போது முன்னுக்குப்பின் முரணாகக் கிருஷ்ணா பதில் அளித்ததோடு போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த மகன் அடையாறு இந்திரா நகரில் உள்ள தனது உறவினரிடம் பேசி நேரில் சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த உறவினர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு வெளிப்பக்கம் பூட்டி இருந்தது. ஓட்டுனரையும் காணவில்லை. வீட்டில் காரும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர் வீட்டு கதவை உடைத்துப் பார்த்தபோது வீடு டெட்டால் போட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அதோடு சுவர்களில் ரத்தக் கறையும் இருந்தது. வீட்டிலிருந்த லாக்கர்கள் பீரோ ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன.
ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்று உணர்ந்த ஸ்ரீகாந்தின் உறவினர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் காணவில்லை. காரில் கடத்தப்பட்டுள்ளனர் என்று எங்களுக்கு அன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் புகார் வந்தது.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தொடங்கியது. வீட்டில் ரத்தக் கறை, வீட்டிலிருந்த நகைகள் கார் மற்றும் ஓட்டுநரைக் காணவில்லை. இதனால் சந்தேகம் வலுத்தது.
ஓட்டுநர் கிருஷ்ணா இருவரையும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கருதினோம். அவர்களது நெமிலிச்சரி பண்ணை வீட்டிற்குத் தனிப் படையை அனுப்பி வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினோம்.
அப்போதுதான் அங்குப் புதிதாக குழிதோண்டி மண்ணால் மூடப்பட்டிருந்த தடயம் கிடைத்தது. அதன் அருகே செல்போன் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அருகில் கை உரை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருந்தது உறுதியானது. அப்போது ஸ்ரீகாந்தின் இனோவா காரில் கொலையாளி தப்பி சென்று இருக்க வேண்டும் என்று காரின் நம்பரை வைத்துப் பல செக் போஸ்ட்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தோம்.
நேற்று காலை 10.30 மணிக்கு உத்தண்டி செக்போஸ்ட் பகுதியில் கார் கடந்து சென்றது தெரியவந்தது. பின்னர் சூளைமேடு வந்து பாடி வழியாக மெயின் ரோட்டில் சென்றது. 12.30 மணி அளவில் கும்மிடிப்பூண்டி அருகே சென்று அங்கிருந்து ஆந்திர எல்லைக்குள் சென்றது.
கொலையாளி கிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆந்திரா முதல் நேபாளம் வரை உள்ள மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார் படுத்தினோம். ரயில் நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடைபெற்றது.
இந்த சூழலில் கார் ஆந்திர மாநிலம் ஓங்கோலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் ஓங்கோல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கிப் பிடிக்கும்படி கேட்டுக்கொண்டோம்.
அதோடு கொலையாளி கிருஷ்ணா சென்ற பாதையில் உதவி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் ஒரு தனிப்படையும் பின்தொடர்ந்து சென்றனர். இந்த சூழலில் மாலை 5.30 மணி அளவில் ஓங்கோலில் வைத்து ஆந்திர போலீசார் கொலையாளியை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் உதவி ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான தனிப்படை போலீசாரிடம் ஓட்டுநர் கிருஷ்ணாவும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட ரவிராயும் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து கார் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டன. ஆந்திர மாநில போலீசார் முன்னிலையில் நகைகள் எடை போடப்பட்டன. அதில் சுமார் 9.8 கிலோ தங்க நகைகளும் 70 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களும் இருந்தது தெரியவந்தது. இதன்பிறகு குற்றவாளிகள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி குற்றவாளிகளை சுமார் 5 மணி நேரத்தில் கைது செய்தோம். இந்த ஐந்து மணி நேரமும் எங்களுக்கு திக் திக் என்று தான் இருந்தது.கொலையாளிகள் நேபாளம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஒருவேளை அப்படி சென்றிருந்தால் விமானத்தில் சென்று நேபாள - இந்திய எல்லையில் மடக்கிப் பிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்றும் தயார் நிலையிலிருந்தது. ஆனால் ஆந்திராவிலேயே மடக்கிப் பிடித்து விட்டோம்.
கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் அதிக அளவில் பணம் வைத்திருப்பவர். அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஓட்டுநர் கிருஷ்ணா இவ்வாறு செயல்பட்டுள்ளார். பணம் வைத்திருக்கும் இடம் ஸ்ரீகாந்துக்கு தெரியும் என்பதால் அமெரிக்காவிலிருந்து ஸ்ரீகாந்த்தும் அவரது மனைவியும் திரும்பி வந்ததும் கொலை செய்துவிட்டு பணத்தைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல ஏற்கனவே திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்துக்கு உதவியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த அவரது நண்பர் ரவிராயை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். இந்த ரவிராயும் சென்னையில் ஓட்டுநராக இருந்து வந்தார்.
கொலை செய்ததும் இருவரது உடலையும் அவர்களது பண்ணை வீட்டில் புதைக்க ஏற்கனவே அங்குக் குழி தோண்டி வைத்துள்ளனர். இவர்கள் திட்டமிட்டபடி இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு பணம் எங்கிருக்கிறது என்று கேட்டு சித்ரவதை செய்து லாக்கர் சாவியையும் பெற்றுக்கொண்ட பின் கொலை செய்துள்ளனர்.
வீட்டின் கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்த்தையும், மேல் தளத்தில் வைத்து அவரது மனைவியையும் கொலை செய்துள்ளனர். மண்வெட்டியைக் கொண்டு தலையில் தாக்கியும், கத்தியால் இருவரது கழுத்தை அறுத்தும் மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
இருவரிடமிருந்து வாங்கிய சாவியைக் கொண்டு லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் பெரிதாக பணம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக தங்க நகைகள் இருந்துள்ளது. அதிலிருந்து மூன்று பெரிய பெட்டிகளிலும் ஒன்பது சிறிய பெட்டிகளிலும் தங்க, வெள்ளி நகைகளையும் எடுத்துக்கொண்டு, இருவரது உடலையும் போர்வையால் சுற்றி வைத்துக்கொண்டு, சந்தேகம் வராமலிருக்க வீட்டை டெட்டால் போட்டு சுத்தம் செய்துள்ளனர். அதன் பிறகு உடலை காரில் போட்டுக் கொண்டு கிளம்பி பண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளனர்” என்று கூறினார்.
கொலையாளி கிருஷ்ணாவின் தந்தை லால்சர்மா ஸ்ரீகாந்திடம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வந்துள்ளார். அவரது குடும்பமும் சென்னையில்தான் வசித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் காவலாளியாக லால்சர்மா வேலை செய்து வந்துள்ளார். அந்த அடிப்படையில்தான் கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு நெருக்கமாகி ஓட்டுநராக வேலையில் சேர்ந்துள்ளார். ஓட்டுநரே முதலாளியைக் கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாந்த் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்ததில் அதில் சில தடயங்கள் சிக்கியுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இருவரது உடலும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று இருவரது உடலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஸ்ரீ காந்த், அனுராதா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மகனும் மகளும் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பான சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த ஜனவரியில் நிலத்தை விற்பதற்காகச் சென்னை வந்த ஸ்ரீகாந்த்தை கிருஷ்ணா தான் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, 'யாரிடமோ நிலத்தை 40 கோடி ரூபாய்க்கு விற்று விட்டேன் என்றும் பணமும் வந்து சேர்ந்து விட்டது' என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்டுக்கொண்ட கிருஷ்ணா 40 கோடி ரூபாயைத் திருடி கொண்டு சொந்த மாநிலத்திற்குத் தப்பிச்செல்லத் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்” என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் சைதாப்பேட்டை 23ஆவது பெருநகர குற்றவியல் நீதிபதி கௌதமன் முன்பு நேற்று நள்ளிரவு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின் கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், “பிரிந்து சென்ற தன் மனைவியின் முன் பணக்காரராக வாழ்த்து காட்ட வேண்டும் என்ற வெறியில் கொலை செய்தேன் என்றும் 3 நாட்களுக்கு முன்பே பண்ணை வீட்டில் உடல்களைப் புதைக்கக் குழியைத் தோண்டி வைத்துக் காத்திருந்ததேன் என்றும் கிருஷ்ணா கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக