வெள்ளி, 15 ஏப்ரல், 2022

நீட் மசோதா தாமதம்: ஆளுனர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்

மின்னம்பலம் : பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் பதவி காலத்தை குறைக்கும் சட்டமசோதா உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இன்று ஏப்ரல் 14 வரை ஒப்புதல் தரவில்லை.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு ஆகியவற்றை எதிரொலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்னமும் ஒப்புதல் அளித்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வில்லை.

ஏற்கனவே அமைச்சர்களும் முதலமைச்சரும் இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து நேரில் வலியுறுத்தி உள்ளனர். பாரதப் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் முதல்வர் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளார்.

அந்த வகையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் நானும் ஆளுநரை சந்தித்து நீட் விலக்கு சட்ட மசோதா, கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பது பற்றி தெரிவித்தோம்.

அடுத்த மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆனால் ஆளுநர் நீட் விலக்கு மசோதா தனது பரிசீலனையில் இருப்பதாக கூறினாரே தவிர, இன்றைக்கு அனுப்பி வைக்கிறேன், நாளைக்கு அனுப்பி வைக்கிறேன், இன்னும் 10 நாட்களில் அனுப்பி வைக்கிறேன் என்று எந்த கால வரையறையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஆளுநர் இன்று நடத்தும் தேனீர் விருந்து, பாரதியார் சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொண்டால் அது சட்டமன்றத்தின் மாண்பை குலைக்கும் செயலாக ஆகிவிடும். எனவே தமிழக அரசின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"என்று தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

அடுத்த கட்டமாக தமிழக அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சட்ட ரீதியாக அரசியலமைப்பு ரீதியாக அடுத்து என்ன செய்யலாம் என்பதை முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார்"என்று கூறினார் அமைச்சர்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக