செவ்வாய், 5 ஏப்ரல், 2022

கோத்தபய ராஜபக்சே ஆட்சி கவிழும் அபாயம்- பாராளுமன்றத்தில் பலம் குறைந்தது

 மாலைமலர் : இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. பொது மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக எதிர்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
ஏற்கனவே டீசல், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மின்சாரம் சுமார் 15 மணி நேரம் வருவதில்லை. இந்த நிலையில் இலங்கை முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதையடுத்து இலங்கையில் மருத்துவ நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று காலை அறிவித்தார். இதனால் மருந்து பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மருந்து, மாத்திரை விலைகள் அதிகரித்து வருகின்றன.
அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் இன்றும் தெருக்களில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் எம்.பி.க்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.



ஆளும் கட்சியில் இருப்பவர்கள் விலகி செல்ல தொடங்கி உள்ளனர். இன்று மதியம் திடீரென நிதி மந்திரி அலி சப்ரி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் அவர் பதவி விலகி ஓடுகிறார். இதனால் இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இது வரை கோத்தபய ராஜபக் சேக்கு ஆதரவாக இருந்த 11 கூட்டணி கட்சிகள் தங்களது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு உள்ளன. ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகினால் மட்டுமே மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று நினைக்கின்றனர்.

இதனால் கோத்தபய ராஜபக்சே ஆதரவு கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. அவர்கள் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இது ராஜபக்சே குடும்பத்தினரை படுதாளத்துக்குள்தள்ளும் அளவுக்கு மாறி உள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியது. ஆனால் பெரும்பாலான எம்.பி.க்கள் கூட்டத் தில் பங்கேற்க வில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணிக்கு 157 எம்.பிக்களின் பலம் உள்ளது.

இந்த நிலையில் முக்கிய கூட்டணி கட்சிகள் பிரிந்து செல்லத்தொடங்கி உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கட்சி விலகி செல்வதை இன்று காலை உறுதிப்படுத்தியது.

இந்த கட்சியின் 14 எம்.பி.க்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

இலங்கை பாராளு மன்றத்தில் கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால் 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். தற்போது 138 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாக கோத்தபய ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி மூத்த தலைவர் ரோகித் தெரிவித்தார்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி மற்றும் கூட்டணி கட்சியைப் சேர்ந்த சுமார் 50 முதல் 60 எம்பிக்கள் கோத்தபய ராஜபக்சே மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களில் சுமார் 20 பேர் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்ப்பார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அல்லது தனித்து செயல்படுவார்கள்.

இத்தகைய சூழ்நிலை உருவானால் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். பாராளுமன்றத்தில் அவரது அரசு பெரும்பான்மை பலத்தை இழக்கும். இதனால் அவர் ஆட்சி கவிழும் அபாயத்தில் இருக்கிறது.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கோத்தபய ராஜபக்சே தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிருப்தி யாளர்களையும், எதிர்ப்பாளர்களையும் அவர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே எதிர்கட்சியின் முக்கிய கோரிக்கையாகும். ஆனால் அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்று அவரது கட்சி மூத்த தலைவர்கள் இன்று காலை கொழும்பில் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கோத்தபய ராஜபக் சேயின் மிக முக்கிய ஆதரவாளரான பிரசன்னா ரனதுங்கா கூறுகையில், அதிபர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. போராட் டங்களை கண்டு அவர் பயந்து ராஜினாமா கடிதங்களை கொடுக்க மாட்டார். அதே சமயத்தில் பாராளுமன்றத்தில் யாராவது 113 எம்பிக்கள் பலம் இருப்பதை நிரூபித்துக்காட்டினால் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க கோத்தபய ராஜபக்சே தயாராக இருக்கிறார் என்றார்.

இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே விடுத்த வேண்டுகோளை விடுத்த எந்த கட்சியும் அமைச் சரவையில் சேரவில்லை. எனவே இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக